துப்பாக்கி சுடும் பயிற்சி!! தவறுதலாக சிறுவனின் தலையில் பாய்ந்த குண்டு!! தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!!

துப்பாக்கிச் சுடும் பயிற்சியின் போது உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுவன் தலையில் குண்டு பாய்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அம்மாசமுத்திரம் என்கிற இடத்தில் சி.ஐ.எஸ்.எஃப் வீரர்களுக்கான துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இன்று காலை வழக்கம் போல வீரர்கள் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அங்கிருந்த தனது பாட்டி வீட்டில் 11 வயதுடைய கலைச்செல்வன் என்கிற சிறுவன் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தான். துப்பாக்கிச் சுடும் பயிற்சியின் போது வெளியான தோட்டா சிறுவனின் தலையில் பாய்ந்தது. இதில் சிறுவன் படுகாயம் அடைந்துள்ளான.
உடனடியாக அவசர ஊர்தி வாகனம் வரவழைத்து சிறுவன் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிறுவனின் மூளைக்கு அருகில் தோட்டா பாய்ந்திருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து தஞ்சாவூர் அரசு பொது மருத்துவமனைக்கு சிறுவன் கொண்டு செல்லப்பட்டுள்ளான். அங்கு மருத்துவர்கள் உயர் சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கீரனூர் டி.எஸ்.பி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கந்தர்வக்கோட்டை முன்னாள் எம்.எல்.ஏ துப்பாக்கி குண்டு பாய்ந்து ஆபத்தான நிலையில் இருக்கும் சிறுவனை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருகின்றனர். துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையத்தை மாற்று இடத்தில் அமைப்பதற்கான கோரிக்கையை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதற்கு அரசாங்கம் விரைவில் செவி சாய்க்கும் என நம்புகிறோம் என்று அவர் கூறினார்.