T20 World Cup: 6 வது லீக் போட்டியில் வங்கதேச அணி வெற்றி

 
T20 World Cup: 6 வது லீக் போட்டியில் வங்கதேச அணி வெற்றி

ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17ம் தேதி தொடங்கி நவம்பர் 14 வரை நடைபெற்று வரும் 7-வது 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் துபாய் சர்வதேச மைதானம், அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானம், ஷார்ஜா மைதானம் மற்றும் ஓமான் கிரிக்கெட் அகாடமி ஆகிய மைதானங்களில் நடைபெறுகின்றன.

லீக் சுற்றில் நேற்று (அக்டோபர் 19) 7.30 மணிக்கு ஓமன் கிரிக்கெட் அகாடமி மைதானம், அல் அமரத்தில் நடைபெற்ற 6வது லீக் போட்டியில், ‘B’ பிரிவில் இடம் பிடித்துள்ள வங்காளதேச – ஓமன் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, வங்காளதேச அணியின் தொடக்க வீரர்களாக நைம் மற்றும் லிட்டன் தாஸ் ஆகியோர் களமிறங்கினர். நைம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்சர் உள்பட 64 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த சகீப் அல் ஹசன் 29 பந்துகளில் 6 பவுண்டரி உள்பட 42 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இறுதியில் வங்காளதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 153 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஓமன் அணியின் பிலால் கான் மற்றும் பய்யாஸ் பட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

இதைத்தொடர்ந்து, 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஓமன் அணியின் தொடக்க வீரர்களாக அகிப் மற்றும் ஜத்திந்தர் சிங், அகிப் 6 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

சற்று நிலைத்து நின்று ஆடிய தொடக்க வீரர் ஜத்திந்தர் சிங் 33 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சர் உள்பட 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்கள் வங்கதேச அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில் ஓமன் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 26 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றிபெற்றது.

வங்கதேசம் தரப்பில் அந்த அணியின் முஸ்தபிஷிர் ரஹ்மான் 4 விக்கெட்டுகளையும், சகீப் அல் ஹசன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

From around the web