ப்ளீஸ் எங்கள விட்டுடுங்க... உங்கள் ஓட்டு யாருக்கு ?.. அலைபேசி அழைப்புக்களால் கதறும் பொதுமக்கள்!
இந்தியா முழுவதும் விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் மும்மூரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றன. அந்த வகையில் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றன. மேலும் சில கட்சிகள் வேட்பாளர் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம் என களப்பணியாற்றி வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை 4 முனை போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் ‘உங்கள் வாக்கு யாருக்கு’ என அலைபேசிக்கு வரும் பதிவு செய்யப்பட்ட கணினி அழைப்புகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து கோவை மக்களவை தொகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் கதறுகின்றனர். அதன்படி “திருப்பூர் வசித்து வருபவர்கள் கோவை மக்களவை தொகுதிக்கு உட்பட்டவர்கள் இங்கு ஏற்கனவே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில், அலைபேசிகளில் பதிவு செய்யப்பட்ட அழைப்புகளால் பொது மக்கள் அவதி அடைந்து வருகிறோம். தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் ‘உங்கள் வாக்கு யாருக்கு’வேட்பாளர் மற்றும் கட்சியின் பெயரை கூறி யாருக்கு வாக்களிக்க உள்ளீர்கள் என அலைபேசி மூலம் தொல்லை கொடுத்து வருகின்றனர். அழைப்பை ஏற்றவுடன் யார் எங்கிருந்து அழைக்கிறார்கள் என்ற அடிப்படை தகவல்கள் கூட சொல்வது இல்லை. அழைப்பை ஏற்றதும் மக்களவை தேர்தலில் ‘உங்கள் வாக்கு யாருக்கு’ என்ற கேள்வியுடன்தான் ஆரம்பிக்கின்றனர்.
தேர்வு செய்தால், ஒவ்வொரு கட்சி மற்றும் வேட்பாளர் பெயரை கூறி, ஒவ்வொரு எண்ணை அழுத்த சொல்கிறார்கள். யாருக்கும் வாக்களிக்க முடிவு செய்யவில்லை என்பதை சுட்டிக்காட்டும் வகையிலும் அதற்கும் ஒரு குறிப்பிட்ட எண்ணை அழுத்த சொல்கின்றனர். இந்த அழைப்புக்கள் யார் மூலமாக வருகிறது என்பதைக் கூட பாமர மக்களால் உணர்ந்துகொள்ள முடியவில்லை. இது ஒருவகையான சர்வே எனில் எதற்காக யாரால் எடுக்கப்படுகிறது என்ற அடிப்படை தகவல் இல்லாமல் அழைப்புகள் வருகின்றன.
எத்தனை முறை துண்டித்தாலும் அழைப்பு வந்து கொண்டே இருக்கிறது.வாக்குரிமை எந்த அளவு பாதுகாக்கப்பட வேண்டியதோ அதே அளவுக்கு யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதும் பாதுகாக்கப்பட வேண்டியதே. இந்த குரல் பதிவு அழைப்பில், ஏதாவது ஒரு வேட்பாளரை தேர்ந்தெடுத்தால் தான், அடுத்து அழைப்பு வராமல் உள்ளது. இல்லையெனில் இந்த மாதிரியான அழைப்புக்கள் தொடர்ந்துகொண்டே பிழைப்பை கெடுக்கின்றன. இவற்றை தேர்தல் ஆணையம் கட்டுப்படுத்த முன்வர வேண்டும் என்கின்றனர் திருப்பூர்வாசிகள்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!