திருப்பதி லட்டு விவகாரம்... 11 நாள் விரதத்தைத் தொடங்கினார் பவன் கல்யாண்!

 
பவண்

திருப்பதி லட்டு பிரசாத நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரத்தில் ஏழுமலையானிடம் மன்னிப்பு கோரும் விதத்தில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் 11 நாள் விரதத்தை நேற்று தொடங்கியுள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் தயாரிக்க கடந்த ஜெகன்மோகன் ஆட்சியில் தரமற்ற நெய் வாங்கியது கண்டறியப்பட்டது. அந்த நெய்யை பரிசோதித்ததில் மாடு, பன்றி கொழுப்புகள், மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலப்படம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதற்கு பல்வேறு மாநிலங்களிலும் பக்தர்கள் கடும் கண்டனமும், வேதனையும் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக உச்சநீதிமன்றம், ஆந்திர உயர் நீதிமன்றத்தில் பலர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இதற்கிடையே ஆந்திர மாநில உத்தரவின்பேரில், இதற்கான விளக்க அறிக்கையை திருப்பதி தேவஸ்தானம் நேற்று அளித்தது. தேவஸ்தான நிர்வாக அதிகாரிசியாமள ராவ் நேற்று அமராவதிக்கு சென்று, முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் இந்த அறிக்கையை அளித்தார். இதுதொடர்பாக சுமார் 2 மணி நேரம் வரை ஆலோசனையும் நடத்தப்பட்டது.

கோயில் புனிதம் கெட்டு விட்டதால், அதற்கு பரிகாரமாக 3 நாட்கள் சிறப்பு யாகங்கள் செய்ய தேவஸ்தானம் தீர்மானித்துள்ளதாக நிர்வாக அதிகாரி தெரிவித்தார். 3 நாட்களுக்கு பதிலாக, ஒருநாள் யாகம் செய்யலாம் என சந்திரபாபு நாயுடு அறிவுரை வழங்கியுள்ளார்.

திருப்பதி லட்டு சந்திரபாபு

இதற்கிடையே, நாடு முழுவதும் சனாதன தர்ம பாதுகாப்பு கமிட்டி தேவை என்று அறிவித்த ஆந்திர மாநில துணை முதல்வரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண், திருப்பதி லட்டு பிரசாத நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதை கண்டிக்கும் விதமாக 11 நாள் விரதத்தை நேற்றுதொடங்கியுள்ளார். இதற்காக குண்டூர் மாவட்டத்தில் உள்ள தசாவதார பெருமாள் கோயிலில் நேற்று அவர் மாலை அணிந்து, விரதம் தொடங்கினார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறுகையில், கடந்த ஜெகன் ஆட்சியில் ராமரின் தலையை வெட்டினர். கோயில் ரதத்தை தீயிட்டு கொளுத்தினர். பல கோயில்கள் இடிக்கப்பட்டன. ஏழுமலையானின் பூஜை வேளைகளை மாற்றினர். பிரசாதங்களில் கலப்படம் நடப்பதாக அப்போதே கூறினோம். யாரும் கண்டு கொள்ளவில்லை. திருப்பதி ஸ்ரீவாணி அறக்கட்டளை எனும் பெயரில் ரூ.10,500 என டிக்கெட் விலை நிர்ணயித்து, அதில் வெறும் ரூ.500க்கு மட்டுமே ரசீது வழங்கப்பட்டது.

திருப்பதி லட்டு

அதற்கெல்லாம் மேலாக, பக்தர்கள் மகா பிரசாதமாக கருதும் லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலப்படமான நெய்யை கலந்தது எவ்வளவு பெரிய பாவம். இவ்வளவு நடந்தும், அறங்காவலர்கள் ஒய்.வி.சுப்பாரெட்டி, கருணாகர் ரெட்டி, நிர்வாக அதிகாரிதர்மா ரெட்டி ஆகியோர் எங்கே போனார்கள்? 

ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் மதித்து நடப்பது ஜனநாயக நாட்டில் மிகவும் முக்கியம். ஒரு கிறிஸ்தவருக்கோ, முஸ்லிமுக்கோ இதே பிரச்சினை நடந்திருந்தால்கூட நாங்கள் போராடுவோம். குற்றம் செய்தவர்கள் கண்டிப்பாக தண்டனை அனுபவித்தே தீர வேண்டும். நடந்துள்ள பாவச் செயலுக்கு கண்டனம் தெரிவித்தும், ஏழுமலையானிடம் மன்னிப்பு கோரும் விதமாகவும், மாலை அணிந்து விரதம் தொடங்கியுள்ளேன். 11வது நாளில் ஏழுமலையானை தரிசித்து விரதத்தை முடிப்பேன்” என்றார். 

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web