கிழிந்த ஜீன்ஸில் ஸ்டைலாக நடந்த இளைஞர்... நடுரோட்டில் ஊசியால் தைத்த வாலிபர்கள்... வீடியோ வைரலானதால் விபரீதம்!
நன்றாக இருக்கின்ற ஜீன்ஸ் பேண்டையே கிழித்து, பேஷனாக்கும் காலம் இது. இந்நிலையில், ஆங்காங்கே கிழிந்தபடி ஜீன்ஸ் பேண்டை பேஷனாக அணிந்து வந்த வாலிபரை வழிமறித்த இளைஞர்கள், அவரின் கைகளைப் பின்புறமாக பிடித்துக் கொண்டு ஜீன்ஸ் பேண்டை பக்கத்திலிருந்த கடையில் கோணி ஊசி வாங்கி தைத்து விட்டு, அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது வைரலானதால் இளைஞர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா பனகஜே பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஷாகிப். இவரது மகன் சாகீல்(21). இவர் பெல்தங்கடி டவுனுக்கு வெள்ளை நிற 'டி-சர்ட்' மற்றும் நீல நிற ஜீன்ஸ் பேண்ட் அணிந்தபடி சென்றிருக்கிறார். இஅவரது ஜீன்ஸ் தற்போதைய பேஷன் படி ஆங்காங்கே கிழிந்த நிலையில் இருந்துள்ளது. தொடை பகுதியில் சல்லடை துணி போல ஜீன்ஸ் பேண்ட் இருந்துள்ளது. இந்த பேண்டை அணிந்தபடியே பெல்தங்கடி டவுனுக்கு சென்ற சாகீல் சந்தேகட்டே மார்க்கெட் பகுதியில் சுற்றித்திரிந்து தனக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு லாயிலா கிராமம் புத்ரபைலு பகுதியைச் சேர்ந்த சபீர், அனீஷ் பனகஜே, பாப் ஜான் சாகேப் ஆகிய 3 பேரும் சேர்ந்து சாகீலை வழிமறித்துள்ளனர். பின்னர் சாகீலின் ஜீன்ஸ் பேண்டை பார்த்து, ‘இது போன்ற ஆடைகள் அணிந்து பொது இடங்களில் வரக்கூடாது’ என்று அவர்கள் அறிவுறுத்தினர்.
இது குறித்து அப்போது சாகீலுக்கும், சபீர் உள்ளிட்ட 3 பேருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சபீர் உள்ளிட்ட 3 பேரும் சாகீலை வசமாக பிடித்து வைத்துக் கொண்டனர். அதையடுத்து அவர்கள் அங்குள்ள ஒரு கடையில் கோணி ஊசி மற்றும் சணலை வாங்கினர்.
பின்னர் சாகீலை பின்னால் இருந்து கைகளை மடக்கிப்பிடித்தபடி ஒருவர் பிடித்துக் கொள்ள இன்னொருவர் கோணி ஊசி மற்றும் சணலை கோர்த்து அவரது ஜீன்ஸ் பேண்ட்டை தைத்துள்ளனர். இதை இன்னொருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்த்யுக் கொண்டு அதன் பின்னர் சாகீலை விடுவித்துள்ளனர்.
அந்த வீடியோவை அவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில், சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது. தனது வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் மன வேதனை அடைந்த சாகீல், தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அந்த நேரத்தில் அவர்கள் வீட்டின் கார் டிரைவர் வந்த நிலையில், பதறியடித்து சாகீல் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து, சாகீலை சிகிச்சைக்காக பெல்தங்கடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
தற்போது சாகீல் மேல்சிகிச்சைக்காக மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து இதுவரை போலீசில் சாகீல் தரப்பில் புகார் அளிக்கவில்லை. இருப்பினும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.