வாக்குப்பதிவு துவங்கியது... இன்று மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டசபைத் தேர்தல்... ஆர்வமுடன் வரிசையில் திரண்ட வாக்காளர்கள்!
இன்று காலை 7 மணிக்கு மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு துவங்கிய நிலையில் வாக்காளர்கள் காலையிலேயே ஆர்வமுடன் வரிசையில் திரண்டிருந்து வாக்களித்து வருகின்றனர். இன்று உத்தரபிரதேசத்தில் 9 இடங்கள், பஞ்சாப்பில் 4 தொகுதிகள், கேரளாவில் ஒரு தொகுதியிலும், மகாராஷ்டிராவில் உள்ள நந்தட் மக்களவை தொகுதியிலும் இடைத்தேர்தல் என்று இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், இந்த தொகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 23ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிராவில் 288 சட்டப்பேரவை தொகுதிகள், ஜார்கண்ட்டில் 38 தொகுதிகளுக்கான 2ம் கட்ட சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. ஆளும் பாஜ தலைமையிலான மகாயுதி கூட்டணியில் பாஜ 149 இடங்களிலும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 81 இடங்களிலும், அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 59 இடங்களிலும் போட்டியிடுகின்றன.
எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடியில், காங்கிரஸ் 101 இடங்களிலும், உத்தவ் தாக்கரேயின் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா 95 இடங்களிலும், சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திரபவார் கட்சி 86 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டதால், பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட பாஜ தலைவர்கள் மகாராஷ்டிராவில் முகாமிட்டு பிரசாரம் செய்தனர். இது போல், மகாவிகாஸ் அகாடி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாடாளுமன்ற காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் சூறாவளி பிரசாரம் செய்தனர்.
288 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. மொத்தம் 9,63,69,410 வாக்காளர்கள் உள்ளனர். மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சியை பிடிக்குமா? அல்லது பாஜ கூட்டணியே ஆட்சியை தக்க வைக்குமா? என்பது வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 23ம் தேதி தெரியவரும்.
ஜார்க்கண்ட்: ஜார்கண்டில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் முதற்கட்டமாக கடந்த 13ம் தேதி 43 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. இதில் 65 சதவீத வாக்குகள் பதிவானது. இரண்டாவது கட்டமாக இன்று 38 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி ஆட்சியை தக்கவைக்குமா? அல்லது பாஜக கூட்டணி ஆட்சியை கைப்பற்றுமா? என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. ஜார்க்கண்டில் பதிவான வாக்குகளும் வரும் 23ம் தேதி எண்ணப்படும்.
ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மற்றும் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட தொகை ரூ.1,082 கோடியைத் தாண்டியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 2019ல் மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்டில் பறிமுதல் செய்த தொகையை விட இந்தத் தேர்தலில் ஏழு மடங்கு அதிகமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்டில் இருந்து 858 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2019ல் மகாராஷ்டிராவில் ரூ.103.61 கோடியும், ஜார்க்கண்டில் ரூ.18.76 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!