விஏஓ உட்பட 2 பேர் படுகாயம்... மோதி விட்டு நிற்காமல் சென்ற லாரியால் பொதுமக்கள் ஆவேசம்!

 
விபத்து

ஸ்ரீவைகுண்டம் அருகே லாரி மோதி கிராம நிர்வாக அலுவலர் உள்பட 2 பேர் படுகாயமடைந்தனர். மோதி விட்டு நிற்காமல் சென்ற லாரியை பொதுமக்கள் விரட்டி சென்று கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே தேர்க்கன்குளத்தைச் சேர்ந்தவர் முத்தையா மகன் கருப்பசாமி. இவர் சாத்தான்குளம் தாலுகா கருங்கடல் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவருடைய உறவினர் உடல்நலக்குறைவால் நெல்லையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி

இந்நிலையில், கருப்பசாமியும், அவருடைய உறவினர் சொல்விளங்கும் பெருமாளும் நேற்று மதியம் நெல்லைக்கு சென்று உறவினரை பார்த்தனர். பின்னர் அவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் தங்களது ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மணல்விளை பகுதியில் சென்றுக் கொண்டிருந்த போது, அந்த வழியாக சென்ற லாரி எதிர்பாராத விதமாக இவர்கள் சென்றுக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. இதில் கருப்பசாமி, சொல்விளங்கும் பெருமாள் ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர்.

உடனே லாரியை நிறுத்தாமல் டிரைவர் வேகமாக சென்றார். இதனைப் பார்த்த அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மோட்டார் சைக்கிள்களில் லாரியை விரட்டி சென்றனர். இதனால் சிறிது தூரத்தில் லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் லாரியின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். 

கைது

இது குறித்து தகவல் அறிந்ததும், சேரகுளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விபத்தில் படுகாயமடைந்த கருப்பசாமி, சொல்விளங்கும் பெருமாள் ஆகியோரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான கிளாக்குளத்தைச் சேர்ந்த அர்ஜூனனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

From around the web