இன்று திருவண்ணாமலை தீபத்திருவிழா கொடியேற்றம் கோலாகலம்!!
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அந்த வகையில், இந்தாண்டு கார்த்திகை தீபத்திருவிழா இன்று நவம்பர் 17ம் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது.
கொடியேற்றத்திற்கு முந்தைய 3 நாட்கள் காவல் தெய்வ உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கும். அதன்படி கடந்த செவ்வாய்கிழமை இரவு திருவண்ணாமலை சின்னக் கடைத் தெருவில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் துர்க்கை அம்மன் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4.45 மணியில் இருந்து 6.12 மணிக்குள் அருணாசலேஸ்வரர் சன்னதியில் உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது, அலங்கார ரூபத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் எழுந்தருளி காட்சியளிப்பார். அதைத்தொடர்ந்து, பஞ்சமூர்த்திகள் கண்ணாடி விமானங்களில் மாடவீதியில் பவனியும், இரவில் நந்தி வாகனத்தில் சுவாமி பவனியும் நடைபெறும்.விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 26-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோவிலில் ஏகன் அநேகன் எனும் தத்துவத்தை உலகுக்கு உணர்த்துவதற்காக, பரணி தீபம் ஏற்றப்படும். அன்று மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.
கார்த்திகை தீபத்திருவிழாவில் கடந்த ஆண்டு 25 லட்சம் பக்தர்கள் பங்கேற்றனர். இந்த ஆண்டு சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து எப்போதும் இல்லாத அளவில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதையொட்டி, தீபத்திருவிழாவுக்காக மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடுகளை, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் இன்று நேரடி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம், மகாதீபம் தரிசன ஏற்பாடுகள் பாதுகாப்பு குறித்து இன்று ஆய்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 30 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்தார்கள். இந்த ஆண்டு கூடுதலாக 25 சதவிகிதம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், போக்குவரத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் கூடுதலாக செய்யப்பட்டுள்ளன.
பரணி தீபம் மற்றும் கார்த்திகை தீபம் பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை கோவிலில் தற்போது முழு நேர அன்னதானம் நடைபெறுகிறது. இங்கு காலை மற்றும் மாலை நேரத்தில் டிபன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும் சாத்தியக்கூறுகள் இருந்தால் கண்டிப்பாக அன்னதானம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்படும்.
கார்த்திகை தீபத்தின் போது விஐபி பாஸ் தரிசனம் முறை அமலில் இல்லை. கட்டளைதாரர் உபயதாரர் பணியாளர்களுக்கு மட்டும் அனுமதி உள்ளது. கடந்த ஆண்டு பரணி தீபத்தில் 4,000 பக்தர்களும் மகா தீபத்தின் போது 7,500 பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு கூடுதலாக அனுமதிப்பது குறித்த ஆலோசனை செய்யப்படுகிறது. திருவண்ணாமலையில் தனியார் தங்கும் விடுதிகளில் கட்டணத்தை உயர்த்த கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
சபரிமலைக்குச் செல்பவர்கள் தினந்தோறும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!