திருச்சியில் பரபரப்பு... மத்திய சிறையில் பிரபல ரவுடி திடீர் மரணம்!
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பிரபல ரவுடியின் தலையை துண்டித்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் தண்டனை அனுபவித்து வந்த கொலைக் குற்றவாளி மாரடைப்பால் உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (35). பிரபல ரவுடியான இவர் அப்பகுதியில் உள்ள பரிமளா என்ற பெண்ணுடன் கூடா நட்பில் இருந்துள்ளார். இந்நிலையில், பரிமளாவை பொது இடத்தில் சுந்தர்ராஜ் தாக்கினர். இது பரிமளாவுக்கும், அவரது அண்ணன் கணேச மூர்த்திக்கும் கவுரவ பிரச்சினையாக மாறியது. இதையடுத்து, கடந்த செப்.12ம் தேதி இரவு கணேசமூர்த்தியின் மகன் வடிவேல் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் சுந்தர்ராஜூக்கு அளவுக்கு அதிகமாக மது கொடுத்து அவரது தலையை துண்டித்து கொலை செய்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த திருவெறும்பூர் போலீசார், கணேசமூர்த்தி, வடிவேல், மாரிமுத்து மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரையும் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கணேச மூர்த்திக்கு இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சிறைக் காவலர்கள் கணேசமூர்த்தியை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சைக்கு பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.