எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவர் 4வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை | போதைப்பொருள் ரெய்டு எதிரொலி!
ஆந்திர மாநிலம் செகந்திராபாத் பகுதியை சேர்ந்தவர் கொண்டா ஸ்ரீனிவாச நிக்கில் (20). இவர் சென்னை அடுத்த பொத்தேரியில் அப்போட் வேல்யூ என்ற தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்து அதே பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தில் பி.டெக் நான்காம் ஆண்டு பட்டப் படிப்பு படித்து வந்தார். இவர் தங்கி இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்தப்பட்டதில், மாணவர் நிக்கில் உள்பட 30க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீசார் சந்தேகத்தின் பேரில் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் அனைத்து மாணவர்களையும் அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் கல்லூரி நிர்வாகம் சம்பந்தப்பட்ட நிக்கில் என்ற மாணவனிடம் விசாரணைக்கு வரும்படி கூறியிருந்ததாக கூறப்படுகிறது. மேலும் பெற்றோரையும் கல்லூரிக்கு நேரில் வரச் சொல்லி கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தியது. அதே சமயம், அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த வீட்டை காலி செய்ய சொல்லி வீட்டின் உரிமையாளர் மாணவன் நிக்கிலிடம் தெரிவித்திருக்கிறார்.
இதனால் மன உளைச்சலில் இருந்து நிக்கில் நேற்றிரவு திடீரென தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த மாணவர் நிக்கில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
கல்லூரி நிர்வாகத்தில் இருந்து உயிரிழந்த மாணவனின் பெற்றோரை கல்லூரிக்கு வர சொல்லி சொன்னதாகவும் அது சம்பந்தமாக மாணவர் தனது பெற்றோரிடம் பேசிவிட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா