தனக்குத் தானே மின்சாரம் பாய்ச்சிக் கொண்டு சாஃப்ட்வேர் இன்ஜினியர் தற்கொலை.. உருக்கமான கடிதம் சிக்கியது!

 
மின்சாரம்

அதிக மன அழுத்தம் காரணமாக தனக்குத் தானே மின்சாரம் பாய்ச்சிக் கொண்டு சாஃப்ட்வேர் இன்ஜினியர் தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (50) என்பவர் சென்னையை அடுத்துள்ள வண்டலூர் அருகே வேங்கடமங்கலத்தில் மனைவி ஜெயராணி (45) இரண்டு குழந்தைகள் என குடும்பத்தினருடன் வசித்து வந்தார். 

பல்லாவரத்தில் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் இன்ஜினியராக பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த 6 மாத காலமாக கார்த்திகேயன் அதிக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. 

தினமும் வேலைக்குச் சென்று விட்டு வீட்டிற்கு வந்தவுடன், தனக்கு யாரோ செய்வினை வைத்து விட்டார்கள் என மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போல் பேசி வந்துள்ளார். இதற்கான சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். 

தேனி

கடந்த 2 நாட்களுக்கு முன்பாக அவரது மனைவி 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தனது தாயார் வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில், நேற்று தேனி சென்று விட்டு திரும்பி வந்த கார்த்திகேயன், தனது அறைக் கதவை தாழிட்டுக் கொண்டு, பெல்ட் ஒன்றின் உதவியுடன் தனக்குத் தானே உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இன்று அதிகாலை வீட்டிற்கு வந்த மனைவி கதவை  வெகு நேரமாக தட்டியும் திறக்காதால்  உறவினர்  உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, கார்த்திகேயன் உடலில் மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்தது தெரிய வந்தது. 

உடனடியாக மின்சாரத்தைத் துண்டித்துவிட்டு, இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். தாழம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கார்த்திகேயன் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு விசாரணை மேற்கொண்டனர். 

போலீசாரின் விசாரணையில் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் கார்த்திகேயன் எழுதி வைத்த கடிதம் சிக்கியது. அதில், ‘எனக்கு பலர் செய்வினை வைத்துள்ளார்கள். இதில் இருந்து என்னை காப்பாற்றிக் கொள்ள நான் தற்கொலை செய்து கொள்கிறேன்’ என எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கார்த்திகேயன் இந்தக் தகவலை தனது தம்பிக்கும் இமெயிலில் அனுப்பி உள்ளார். அதில், ’எனது மறைவுக்குப் பிறகு எனது குழந்தைகளை நல்லபடியாக பார்த்துக் கொள்ளவும். அவர்களை  கைவிட்டு விடவேண்டாம்’ என உருக்கமாக எழுதி இருக்கிறார்.

முன்னதாக, கார்த்திகேயன் மாரடைப்பால் இறந்ததாக குடும்பத்தினர் உண்மையை மறைத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், கார்த்திகேயனின் தம்பி போலீசில் புகார் தெரிவித்ததால் குடும்பத்தினர் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளனர். மேலும், பிரேத பரிசோதனையில் அவர் மின்சாரம் பாய்ந்து தான் உயிரிழந்தார் என தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள தாழம்பூர் போலீசார் தொடர்ந்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web