ஒரே நாளில் பெரும் அதிர்ச்சி.. அடுத்தடுத்த பற்றி எரிந்த ஓலா இ-பைக்குகள்.. பீதியில் மக்கள்!
கரூர் மற்றும் மதுரையில் ஒரே நாளில் ஓலா இ-பைக்குகள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் திருக்காம்புலியூர் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த ஓலா மின்சார வாகனம் சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. கரூர் மாவட்டம் வெள்ளையணி பகுதியை சேர்ந்தவர் தினேஷ். இவர் வேலாயுதம்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மின்சார பேட்டரியில் இயங்கும் ஓலா இ-பைக்கை வாங்கினார். தினமும் அலுவலகம் செல்ல இந்த வாகனத்தை பயன்படுத்தினார்.
அந்தவகையில் இன்று வழக்கம்போல் ஓலா இ-பைக்கில் தினேஷ் அலுவலகம் சென்றார். அப்போது, சேலம் புறவழிச்சாலையில் திருக்காம்புலியூர் மேம்பாலத்தில் சென்றபோது, பேட்டரி வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து திடீரென புகை வந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த தினேஷ், சாலையோரம் இருசக்கர வாகனத்தை நிறுத்தி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார்.
ஆனால் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்குச் செல்வதற்குள் ஓலா மின்சார வாகனம் முற்றிலும் எரிந்து நாசமானது. இதையடுத்து தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து கரூர் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புகை மூட்டத்துடன் சாலையில் வாகனம் நிறுத்தப்பட்டதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்தில் சேதமடைந்த இந்த ஓலா இருசக்கர வாகனத்தின் மதிப்பு 1.47 லட்சம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் மதுரை தனக்கன்குளத்தில் சாலையில் ஓலா பைக் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்தவர் கனகராஜ். இவர் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் இன்று காலை வேலை முடிந்து நாகமலை புதுக்கோட்டையில் இருந்து சொந்த ஊரான திருமங்கலம் நோக்கி தனகன்குளம் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பைக்கில் வைக்கப்பட்டிருந்த பேட்டரியில் இருந்து புகை வந்தது. அதன்பின், வாகனத்தில் இருந்து இறங்கி, சாலையோரம் நிறுத்திவிட்டு, அப்பகுதியில் இருந்து சென்றார். இந்நிலையில், புகை வந்த பகுதியில் இருந்து திடீரென தீ பரவியது. சிறிது நேரத்தில் வாகனம் முற்றிலும் தீப்பிடித்து எரிந்தது. ஒரே நாளில் இருவேறு பகுதிகளில் ஓலா பைக்குகள் தீயில் எரிந்து நாசமான சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!