அதிர்ச்சி... சக மாணவன் சாதி ரீதியாக திட்டியதால் 11ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை!
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே, ஒரே வகுப்பில் படிக்கும் சக மாணவன், சாதி ரீதியாக திட்டியதால் 11ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்திருந்த போலீசார், இந்த வழக்கை வன்கொடுமை தடுப்பு வழக்காக திருத்தம் செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தவர் விஷ்ணுகுமார்(16). கடந்த 2ம் தேதி காலை வீட்டிலிருந்து பள்ளிக்கு சென்ற விஷ்ணுகுமார், பள்ளிக்கு செல்லாமல் மீண்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அதன்பின்னர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு, உயிரிழந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவனின் பெற்றோர் இது குறித்து உடையாளிபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து விசாரணை நடத்திய உடையாளிபட்டி போலீசார், சட்டப்பிரிவு 174ன் கீழ் காதல் தோல்வியால் மாணவன் விஷ்ணுகுமார் தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இதனை ஏற்க மறுத்த மாணவனின் குடும்பத்தினரும், உறவினர்களும், தங்கள் மகனை, சக மாணவர்கள் சாதி ரீதியில் திட்டியதால் தான் விஷ்ணுகுமார் உயிரிழந்ததாகவும் இந்த விவகாரத்தில் விஷ்ணுகுமாரை சாதி பெயர் சொல்லி பேசிய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தனர்.
மேலும் மாணவன் விஷ்ணுகுமார் உயிரிழந்த விவகாரத்தில் மாற்று சமூகத்தை சேர்ந்த சக மாணவர்கள் விஷ்ணு குமாரை ஜாதி பெயரை சொல்லி திட்டியதோடு தாக்கியதாகவும் அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த வழக்கை வன்கொடுமை தடுப்பு வழக்காக போலீசார் மாற்றி 294B 323,306,SC ST ஆகிய சட்ட பிரிவுகளை சேர்த்து உள்ளனர்.
இந்த வழக்கில் அதே பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் பெயரையும் போலீசார் சேர்த்துள்ளனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து உடையாளிப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களிடையே மீண்டும் சாதி ரீதியிலான பிரச்சனைகள் அதிகரித்து வருவதும், அதில் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!