தமிழ்நாட்டில் 120 வயதை கடந்த மூத்த குடிமக்கள்.. 137 பேர் இருப்பதாக உறுதி ..!!
உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் வசித்து வரும் யோகா குரு சுவாமி சிவானந்தா என்பவருக்கு தற்போது 127 வயதாகிறது. இவர் 1896 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி இப்போது வங்கதேசத்தில் உள்ள சில்ஹெட் மாவட்டத்தில் பிறந்ததாகக் கூறப்படுகிறது. நாள்தோறும் யோகா செய்து வரும் இவர் இளைஞர்கள் பலருக்கும் யோகா கற்றுக்கொடுத்து வருகிறார். சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். கடந்த ஆண்டு மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவித்தது.
தரவுகளின்படி இந்தியாவின் மிகவும் வயதான நபராக சுவாமி சிவானந்தா அறியப்படுகிறார். (இவர் பிறந்த தேதி உறுதி செய்யப்படவில்லை என்பது கூடுதல் தகவல்). ஆனால், தமிழ்நாட்டில் 120 வயதைக் கடந்தவர்கள் 137 பேர் என்று நேற்று வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலின் மூலமாக தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மாநிலத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியே 11 லட்சத்து 31 ஆயிரத்து 197-ஆக உள்ளது. ஆண்களைவிட 9 லட்சத்து 85 ஆயிரத்து 961 பெண் வாக்காளர்கள் கூடுதலாக உள்ளனர்.
மேலும் வயது வாரியாக வாக்காளர்களின் எண்ணிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. அதில். 100 முதல் 109 வயதுடையவர்கள் - 15,788 பேர்.
அதுபோல 110- 119 வயதுடையவர்கள் - 381 பேர். 120 வயதுக்கு மேல் 137 பேர் இருக்கின்றனர் என்பது அதிகாரபூர்வ தகவல். எனினும் இவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் வயதை நிரூபிக்கும் ஆவணம் எதுவும் கொண்டிருக்கவில்லை என்றும் அவர்கள் கூறியதன் அடிப்படையில் வயது பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.