சபரிமலை மகர ஜோதி |தினமும் 18 மணிநேர தரிசனம்... 15,000 வாகனங்களை நிறுத்த இடம்... ரூ.5 லட்சம் இன்சூரன்ஸ்... ஏற்பாடுகள் தீவிரம்!
சபரிமலையில் தினமும் 18 மணி நேரம் தரிசனம், 15,000 வாகனங்கள் நிறுத்துமிடம் என்று மண்டல மகரவிளக்கு மஹோத்ஸவத்திற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளன.
சபரிமலை மண்டல மகரவிளக்கு மஹோத்ஸவத்திற்காக நடை திறக்கப்பட உள்ளதால் பக்தர்களின் வசதிகளுக்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளன.
தினந்தோறும் 18 மணி நேரம் தரிசனம் செய்வதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும் என்றும், சபரிமலையில் தரிசனம் மதியம் 1 மணி வரையிலும் பின்னர் மாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி ஒரு நாளைக்கு 80,000 பேர் சபரிமலையில் தரிசனம் செய்யலாம். இது 70,000 பேருக்கு விர்ச்சுவல் க்யூ புக்கிங் மூலமாக அனுமதிக்கப்படுவார்கள் என்றும் 10,000 பக்தர்கள் தினமும் நேரடி முன்பதிவு மூலம் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
நேரடி முன்பதிவு செய்வதற்கு ஆதார் அட்டை அல்லது நகல் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்யாதிருந்தால் நேரடி முன்பதிவு செய்ய பம்பாவில் ஏழு கவுன்டர்கள் திறக்கப்படும் என்றும் அதே போன்று எருமேலி மற்றும் வண்டிப்பெரியாரில் நேரடி முன்பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களில் வரும் பக்தர்களின் வசதிக்காக நிலக்கல், பம்பை மலை உச்சி, சக்குபள்ளம் ஆகிய இடங்களில் சுமார் 15,000 வாகனங்கள் ஒரே நேரத்தில் நிறுத்த முடியும் என்றும், வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணங்களை பாஸ்ட் டேக் மூலம் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எருமேலியில் வீட்டு வசதி வாரிய நிலத்தில் வாகன நிறுத்தம் அமைக்கப்படும். பம்பாவில் ஒரே நேரத்தில் 6,000 பேர் தங்கும் திறன் கொண்ட ஒன்பது 'நடைபந்தல்கள்' ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நிலக்கல், பம்பை, சன்னிதானம் ஆகிய இடங்களில் 25,000 பேர் படுத்துக் கொள்ளும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதே போன்று சன்னிதானத்தில் 10,000 பேர் படுக்கலாம்.
சாரம்குத்தியில் உள்ள கொதிகலனின் உற்பத்தி திறன் ஒரு மணி நேரத்திற்கு 10,000 லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. சாரம்குத்தி முதல் சன்னிதானம் வரை 60 'சுக்கு தண்ணீர்' கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. பம்பையில் 3,000 இரும்பு பாட்டில்களில் தண்ணீர் நிரப்பி பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படும்.
நவம்பர் 16ம் தேதிக்குள் 40 லட்சம் அரவணா பாயாசம் டின்கள் தயார் செய்யப்படும் என்றும், இந்த வருடம் முதல் சபரிமலை வரும் பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் விபத்துக் காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதே போன்று நடைப்பயணமாக வரும் பக்தர்களின் வசதிக்காக மரக்கூட்டத்தில் இருந்து சந்திரானந்தன் சாலை ஜோதிநகர் வரை 1500 இரும்பு நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதய நோய் மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவக் குழுவும் அமைக்கப்படும். பிரபல நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராம் நாராயணன் தலைமையில் 100 மருத்துவர்கள் இலவச சேவைக்கு தயாராக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!