‘மெய்யழகன்’ விமர்சனம்... கலங்கடித்த கார்த்தி.. கெத்து காட்டிய அரவிந்த்சாமி!

 
மெய்யழகன்
 


'96' படத்திற்கு பிறகு 6 வருட இடைவெளிக்குப் பின் ‘மெய்யழகன்’ மூலமாக வந்திருக்கிறார் இயக்குநர் பிரேம்குமார். நுட்பமாக மன உணர்வுகளைக் காட்சிகளில் கடத்தும் செப்படி வித்தை இந்த படத்திலும் இவருக்கு கை கொடுத்திருக்கிறது. 96 படத்தின் கதையைப் போலவே இதுவும் ஒரே இரவில் நடைபெறும் கதை தான் என்றாலும், அந்த ஒரு இரவில் பலவருட உணர்வுகளை ரசிகர்களின் மனசுக்குள் கடத்தியிருக்கிறார்.

மெய்யழகன்

96 ல் த்ரிஷா - விஜயசேதுபதி போல இதில் கார்த்தி - அரவிந்த்சாமிக்கு இடையே நடைபெறும் நிகழ்வுகள். கார்த்தி யாரென்றே தெரியாமல் தஞ்சாவூருக்கு வந்திறங்கும் அரவிந்த்சாமி அவரது அன்பில் கரைந்து காணாமல் போவது தான் கதை.சொத்துப் பிரச்சினை காரணமாக சொந்த ஊரான தஞ்சாவூரை காலி செய்து விட்டு சென்னை கிளம்புகிறது அரவிந்த்சாமியின்  குடும்பம். 20 வருஷங்கள் கடந்து சென்ற நிலையில், சொந்த ஊரில் நடைபெற உள்ள சித்தி மகளின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மீண்டும் தஞ்சாவூர் செல்கிறார் அரவிந்த்சாமி.

அந்த இரவில் அரவிந்த்சாமியை தஞ்சாவூரில் வரவேற்கும் கார்த்தி, அவரை உடனிருந்து கவனித்துக் கொள்கிறார். அரவிந்த்சாமியின் கூடவே இருந்து அவரைக் கவனித்துக் கொள்வதாக எப்போதும் அவரை விட்டு நகராமல் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும் கார்த்தியை அன்பு தொல்லையாக உணர்கிறார் அரவிந்த்சாமி. 

ஒரு கட்டத்தில் கார்த்தியின் வெள்ளந்தித்தனமும், உண்மையான அன்பும் புரிய, கார்த்தியின் பெயரைக் கூட தான் இதுவரைக் கேட்டுத் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறோமே என்று கலங்குகிறார். இந்த குற்றவுணர்ச்சியில் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமலேயே அவசர அவசரமாக சென்னைக்கு கிளம்புகிறார். கார்த்தி யார் என்று அரவிந்த்சாமிக்கு தெரிந்ததா? அதன் பின் என்ன ஆனது? என்பது தான் ‘மெய்யழகன்’.

கார்த்தி, அரவிந்த்சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா ஜெயப்பிரகாஷ், தேவதர்ஷினி என்று படத்தில் பெரிய நட்சத்திர லிஸ்ட் இருந்தாலும் படம் முழுக்கவே கார்த்தியும், அரவிந்த்சாமியும் தான் தூக்கி நிறுத்துகிறார்கள். தஞ்சை இளைஞராக தலையை ஆட்டி ஆட்டி வட்டார வழக்கைப் பேசும் கார்த்தி மனசில் நிற்கிறார். ‘அத்தான்...அத்தான்’ என அரவிந்த்சாமியை சுற்றி வரும் அத்தனைக் காட்சிகளுமே ரகளை. 

மெய்யழகன்

ஜல்லிக்கட்டு காளையையும், அரவிந்த்சாமியின் சைக்கிளையும் கார்த்தி விவரிக்கும் இடம் சிலிர்ப்பு. கோவிந்த் வசந்தாவின் இசை கதையை உயிர்ப்பிக்கிறது. இந்த கதையில் ஸ்டெர்லைட் பிரச்சினை, ஈழத்தமிழர் பிரச்சினைகள் என்று வலிந்து திணித்திருப்பதில் யார் தலையீடு என தெரியவில்லை.  கதைக்கு தொடர்பே இல்லாமல் நீட்டி முழக்கி இருப்பதில் இயக்குநர் தடுமாறி இருப்பது தியேட்டரில் நெளிய செய்கிறது.  

தங்கை திருமணம் என்ற ஒரே காரணத்திற்காக வருபவர் ஒரு இரவு கூட முழுசாக தஞ்சாவூரில் தங்காமல் அப்படி அவசரமாக சென்னைக்கு கிளம்ப நினைப்பது ஏன்? அரவிந்த்சாமி குடும்பம் மேல் இத்தனை பாசம் வைத்திருப்பவர்கள் இந்த தொழில்நுட்ப காலத்தில் ஒருமுறை கூடவே அவரை சந்திக்கவோ, அவர் குடும்பத்தினரை சந்திக்கவோ முயற்சிக்கவில்லை என்று படத்தில் ஏகப்பட்ட இடங்களில் சறுக்கல்கள் இருந்தாலும், வெட்டுக்குத்து, வன்முறை, ரத்தமும், சதையும், அரைகுறை ஆடைகளில் காவலா நடனங்களுமாக தடம் மாறிச் சென்றுக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின் தடத்தை சரியான வழித்தடத்திற்கு கொண்டு வரும் முயற்சியில் ‘மெய்யழகன்’ வெற்றிப் பெற்றிருக்கிறான்.

From around the web