கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரி தீர்மானம்... ஒட்டுமொத்தமாக ஊராட்சி உறுப்பினர்கள் ராஜினாமா!

 
மீன்கழிவு

கழிவுமீன் நிறுவனங்களை மூடக் கோரும் தீர்மானத்தை ஏற்க மறுப்பதால் எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சி உறுப்பினர்கள் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக உறுப்பினர்கள் சுபா, ஆதிலட்சுமி, சத்திய நாராயண லட்சுமி, பூமாரியம்மாள் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் ஒன்றியம், எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் பொட்டலூரணி. நான்கு கிராமங்களைக் கொண்ட இவ்வூராட்சியில், பொட்டலூரணி கிராமம் மட்டுமே ஏறத்தாழ சரிபாதி மக்கள் தொகையைக் கொண்டது. 4 ஊர்களையும் 9 வார்டுகளையும் உடைய எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சியில், மற்ற மூன்று ஊர்களிலும் சேர்ந்து ஐந்து வார்டுகள் இருக்கின்றன. 

பொட்டலூரணியில் மட்டும் நான்கு வார்டுகள் உள்ளன. அப்படி இருந்தும் பொட்டலூரணி கிராமத்தில் கிராம சபைக் கூட்டம் நடத்துவதை மாவட்ட ஊராட்சி நிர்வாகம் திட்டமிட்டே தவிர்த்து வந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்குள் இரு கூட்டங்கள் மட்டுமே பொட்டலூரணியில் நடத்தப்பட்டன. பல முறை ஊராட்சி மன்றத்தில் கேட்டும் பயனில்லை. எனவே 2024 ஆகஸ்ட் 15 கிராம சபைக் கூட்டத்தை பொட்டலூரணி கிராமத்தில் நடத்தக் கோரி, 30 நாள்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் நடத்த முன்வரவில்லை. 

மீன்கழிவு

எனவே, "மக்கள் கிராமசபைக் கூட்டம்" என்ற பெயரில், பெரும்பான்மையான ஊராட்சி உறுப்பினர்களும் பொதுமக்களும் ஒன்று திரண்டு ஆகஸ்ட் 15-ல் பொட்டலூரணியில் நடத்தினோம். அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மனங்களை மாவட்ட ஆட்சியர், ஊராட்சி உதவி இயக்குநர் தொடங்கி அரசு முதன்மைச் செயலாளர் வரை தொடர்புடைய அலுவலர்கள் அனைவருக்கும் அனுப்பினோம். அவ்வாறு அனுப்பியும் தீர்மானங்கள் மீது இதுவரை, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

காந்தியடிகள் பிறந்த நாளான 2024 அக்டோபர் 2ல் எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சி மன்றம் நடத்தும் கிராம சபைக் கூட்டத்தையாவது பொட்டலூரணி கிராமத்தில் நடத்தக் கோரி, எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவரிடம் கோரிய போது வழக்கம் போல் அடுத்த முறை நடத்துவோம் என்றார். சரி நீங்கள் நடத்தும் கூட்டத்தில் பொட்டலூரணி ஊரைச் சுற்றி உள்ள துர்நாற்றம் வீசிச் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவித்து வரும் மூன்று கழிவுமீன் நிறுவனங்களையும் மூடக் கோரி மக்கள் கொண்டு வரும் தீர்மானத்தை பதிவேட்டில் ஏற்றுங்கள் என்று கேட்ட போது மேலதிகாரி பிடிஓ ஒப்புதல் கொடுத்தால் தான் ஏற்ற முடியும் என்று கூறிவிட்டார். 

மீன்கழிவு

எனவே இரண்டாவது முறையாக காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2ல் இரண்டாவது "மக்கள் கிராமசபைக் கூட்டம்" நடத்தி, கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, மேதகு ஆளுநர், தலைமைச் செயலாளர், செயலாளர், சுற்றுச் சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறை செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயலாளர், ஆணையர், காவல் துறைத் தலைமை இயக்குநர் (DGP), ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள், தூத்துக்குடி வருவாய்க் கோட்டாட்சியர் ஆகியோருக்கு அனுப்பியுள்ளோம். இந்தத் தீர்மான வரைவில் 9 ஊராட்சி உறுப்பினர்களைக் கொண்ட ஊராட்சியில் 5 ஊராட்சி உறுப்பினர்களும் கிராமசபை உறுப்பினர்களும் சம்மதித்துக் கையெழுத்திட்டுள்ளனர். 

பொட்டலூரணி கிராமத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள கழிவுமீன் நிறுவங்களுக்குக் கொடுக்கப்பட்ட அரசு அனுமதியை உடனடியாக இரத்து செய்ய வேண்டும். பொட்டலூரணி பொதுமக்கள் மீது போடப்பட்ட அனைத்துப் பொய் வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியைச் செய்ய எல்லை நாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவரும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையும் தடையாக இருப்பதால், எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட பொட்டலூரணி கிராமத்தைச் சேர்ந்த நான்கு வார்டு உறுப்பினர்களும் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்கிறோம் என்று தெரிவித்தனர். 

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை!

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web