சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்.. அதிரடியாக பறிமுதல் செய்த ஆம்னி பேருந்துகள்..!
தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் வசித்துவரும் பல லட்சம் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். பஸ், ரயில்கள் மற்றும் விமானங்கள் அனைத்து நிரம்பி வழிவதால் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. தனியார் ஆம்னி பேருந்துகளில் வழக்கமாக உள்ள கட்டணத்தை விட பல மடங்கு கூடுதலாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பயணிகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அரசும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்த நிலையில், போக்குவரத்து கமிஷனர் சண்முக சுந்தரம், இணை கமிஷனர் முத்து ஆகியோரின் உத்தரவின்படி, மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தரமூர்த்தி தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆகியோர் கத்திப்பாரா, மீனம்பாக்கம் மற்றும் பரனூர் ஆகிய இடங்களில் கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, கன்னியாகுமாரி ஆகிய பகுதிகளில் இருந்து சென்னைவந்த ஆம்னி பேருந்துகளில் சோதனை செய்தனர். அப்போது கோவைக்கு கட்டணமாக ₹ 2.950, மதுரைக்கு ₹ 1700, திருச்சிக்கு ₹1100 கன்னியாகுமரிக்கு ₹2400, நெல்லைக்கு ₹ 2100 என்று வசூலிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இது வழக்கமான கட்டணங்களை விட 2 மடங்கு கூடுதல் கட்டணம் ஆகும். இதையடுத்து 9 ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்தனர். ‘’கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.