பழனி பஞ்சாமிர்தம் திடீர் விலை உயர்வு... பக்தர்கள் அதிர்ச்சி!!
முருகப்பெருமானின் மூன்றாம் படைவீடு பழனி தண்டாயுதபாணி திருக்கோவில். இங்கு முருகப்பெருமான் ஆண்டிக்கோலத்தில் தண்டாயுதபாணியாக பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இத்தலத்தில் உள்ள மூலவர் சிலை நவபாஷாணத்தால் அகத்தியரின் தலைமைச் சீடரான போகர் எனும் முனிவர் உருவாக்கினார். பழனி மலைக் கோவிலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திரம் தினசரி பக்தர்கள் எண்ணிக்கை லட்சத்தை தாண்டிவிடும்.
இவ்வாறு வருகை தரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் உண்டு மகிழ இலவசமாக பஞ்சாமிர்தம் வழங்கப்பட்டு வருகிறது.
பழனி என்றாலே பஞ்சாமிர்தம் தான் முதலில் ஞாபகத்திற்கு வரும். கோவில் நிர்வாகம் சார்பில், பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் பழனிக்கு வந்ததன் நினைவாக பஞ்சாமிர்தத்தை வாங்கி செல்கின்றனர். கோவில் நிர்வாகம் சார்பில் பழனி பஸ்நிலையம், அடிவாரம், மின்இழுவை ரெயில் நிலையம், மலைக்கோவில் வெளிப்பிரகாரம் என பல்வேறு இடங்களில் விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.இங்கு டப்பா, டின் என இரண்டு வகைகளில் பஞ்சாமிர்தம் விற்கப்படுகிறது. அதாவது 500 கிராம் அளவில் டப்பாக்களில் விற்கப்படும் பஞ்சாமிர்தம் விலை ரூ.35க்கும், டின்னில் விற்கப்படும் பஞ்சாமிர்தம் ரூ.40க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பழனி முருகன் கோவிலில் விற்கப்படும் பஞ்சாமிர்தம் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் நேற்று முதல் ரூ.5 விலை உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது டப்பா பஞ்சாமிர்தம் ரூ.40-க்கும், டின் பஞ்சாமிர்தம் ரூ.45-க்கும் விற்கப்படுகிறது. இதனால் ஏற்கனவே தயாரான பஞ்சாமிர்த டப்பாக்களில் உள்ள விலையை பேனாவால் மாற்றி விற்பனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது, “பழனி முருகன் கோவிலுக்கு வரும் வருமானத்துக்கு, திருப்பதியை போல் பக்தர் ஒருவருக்கு ஒரு டப்பா பஞ்சாமிர்தத்தை இலவசமாக வழங்கலாம். பக்தகர்களுக்கு தேவை இருந்தால், கூடுதல் டப்பாக்களை பணம் கொடுத்து வாங்கி செல்லலாம். ஆனால் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பஞ்சாமிர்தம் விலை உயர்த்தப்பட்டது கண்டனத்துக்கு உரியது” என தெரிவித்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!