பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் காலமானார்!

 
பாப்பம்மாள்

பத்மஸ்ரீ விருது பெற்றவரும், இயற்கை விவசாயியுமான பாப்பம்மாள் நேற்று செப்டம்பர் 27ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 108

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பம்மாள் என்ற ரங்கம்மாள். கடந்த 60 வருடங்களுக்கு மேலாக இயற்கை விவசாயம் செய்து வந்த இவரது சேவைகளை பாராட்டி, மத்திய அரசு கடந்த 2021-ம் ஆண்டு 'பத்மஸ்ரீ' விருதினை வழங்கி கவுரவப்படுத்தியது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் திமுகவின் முப்பெரும் விழா நடந்தது. இதில் திமுக சார்பில் 'பெரியார் விருது' மூதாட்டி பாப்பம்மாளுக்கு வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமும் வயல்வெளிக்குச் சென்று இயற்கை விவசாயப் பணிகளை மேற்கொண்டு வந்த மூதாட்டி பாப்பம்மாள், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் வயோதிகத்தின் காரணமாக உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு படுத்த படுக்கையானார். அவரை குடும்பத்தினர் கவனித்து வந்த நிலையில், நேற்றிரவு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். 

பாப்பம்மாள்

மூதாட்டி பாப்பம்மாள் உயிரிழந்த தகவலை அறிந்த ஊர் பெரியவர்கள், முக்கிய நிர்வாகிகள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், பொதுமக்கள் அவரது இல்லத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தேனாவரம் என்ற இடத்திலிருந்து சிறுவயதிலேயே தேக்கம்பட்டிக்கு பெற்றோருடன் பாப்பம்மாள் குடி பெயர்ந்தார். தொடக்க காலத்தில் அவரது பெற்றோர் மளிகைக்கடை நடத்தி வந்தனர். அவர் 20 வயதில் திருமணம் செய்து கொண்டார்.

பாப்பம்மாள்

அந்த காலத்தில் 4 ஏக்கர் 29 சென்ட் இடத்தை ரூ.700க்கு வாங்கி விவசாயப் பணியை மேற்கொண்டார். தொடர்ந்து, 2 ஏக்கர் 7 சென்ட் நிலத்தை ரூ.3 ஆயிரத்துக்கு வாங்கி விவசாயப் பணியை விரிவுபடுத்தினார். அதன் பின்னர், கடந்த சில ஆண்டுகளாக இரண்டரை ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். இயற்கை விவசாயியான இவர், வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு நேரடியாகச் சென்று அங்கு வரும் விவசாயிகளிடம் இயற்கை விவசாயம் தொடர்பாக உரையாடியுள்ளார். 

நேரடியாக அவர் விவசாயம் செய்யும் இடத்துக்கு வரும் பொதுமக்கள், மாணவர்களுக்கும் இயற்கை விவசாயம் குறித்த வகுப்புகளை அவர் எடுத்துள்ளார். ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றி வந்த அவர், பொறித்த உணவுகளை தவிருங்க. வேக வைத்த உணவுகளை சாப்பிடுங்க. நேரத்துக்கு சரியாக சாப்பிடுங்க என அனைவருக்கும் அறிவுறுத்துவார். தள்ளாத வயதிலும் தினமும் வீட்டிலிருந்து, சிறிது தூரம் தள்ளியுள்ள தோட்டத்துக்கு நடந்து செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார். ஆரம்பகாலம் முதலே திமுக உறுப்பினராக இருந்து வந்தார்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web