நெல்லை வீரவநல்லூர் பாய் நெசவுத் தொழிலாளிக்கு தமிழக அரசு விருது!

 
நெசவு விருது
 

தமிழகத்தில்  நெல்லை மாவட்டம், வீரவநல்லூரைச் சேர்ந்த பெண் நெசவுத் தொழிலாளி சுலைகாள் பீவிக்கு தமிழக அரசு சார்பில் வாழும் கைவினைப் பொக்கிஷம் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை, வீரவநல்லூர் பகுதியில் இஸ்லாமிய சமூகத்தினர் மெல்லிய கோரைப் பாய் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு மெல்லிய கோரைப் பாய்கள், பட்டுப் பாய்கள் உற்பத்தி செய்யப்படுவதால் பத்தமடை பாய் புகழ் பெற்று திகழ்கிறது. இந்த கோரைப் பாய்களுக்கு சந்தை வாய்ப்புகள் காலப்போக்கில் குறைந்ததால் உற்பத்தி நலியத் தொடங்கியது. 

மேலும் கோரைப் பாய்கள் நுண்ணிய கடின வேலைப்பாடுகள் உள்ளடக்கியதாகவும், பழமையான கைவினை முறைகளை பின்பற்றியும் இன்றும் நெசவு செய்யப்பட்டு வருவதால் அதிக உற்பத்தி செலவு ஏற்படுகிறது. மேஇந்த தொழிலில் ஊதியமும் குறைவாக கிடைப்பதால் இத்தொழிலில் இருந்து தொழிலாளர்கள் விலகிச் செல்லும் நிலை உருவாகியுள்ளது. 

தமிழக அரசு

இந்நிலையில் சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் ஊரக தொழில்நுட்பப் பிரிவு பத்தமடை மற்றும் வீரவநல்லூர் பகுதியில் பாய் நெசவுத் தொழிலில் ஈடுபடும் நெசவாளர்களின் நிலையறிந்து மெல்லிய கோரைப் பாய் தொழிலை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

அதன்படி நெசவாளர்களின் பணிச் சூழலியல் மற்றும் அவர்களின் வேலைப் பழுவைக் குறைக்க வேண்டும் ஆகியவற்றை கருத்தில் கொண்டு எலக்ட்ரானிக் ஜக்கார்டு கைத்தறி உருவாக்கப்பட்டது. இத்தொழில் நுட்பத்தால் உற்பத்தி திறன் பன் மடங்கு அதிகரிக்கவும் வருமானத்தை பெருக்கவும் உதவி செய்துள்ளது. அதன்படி தமிழ்நாடு கைத்திறத் தொழில் வளர்ச்சிக் கழக நிதி உதவியுடன் எலக்ட்ரானிக் ஜக்கார்டு கைத்தறி மூலம் பத்தமடை வீரவநல்லூர் நெசவுத் தொழிலாளர்கள் அதிகளவில் பாய்கள் உற்பத்தி செய்து வருகின்றனர். 

சென்னையில் இயங்கி வரும் ஊரக தொழில்நுட்ப செயற்குழு ஆலோசகர் நளினி, டெக்ஸ்டைல் விஞ்ஞானி கணேசன் ஆகியோர் பாய் நெசவாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர். இதனிடையே, வீரவநல்லூரில் மெல்லிய ரக பாய்களை சிறந்த முறையில் உற்பத்தி செய்து வரும் சுலைகாள் பீவிக்கு தமிழக அரசு 2022-23ம் ஆண்டின் வாழும் கைவினைப் பொக்கிஷம் எனும் விருது வழங்கி கெளரவித்துள்ளது.

From around the web