“கோயில்களை பார்த்துக்க சொன்னா... கோயிலிலேயே குடியிருக்கிறார் சேகர்பாபு” -முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!

 
அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்று காலை தொடங்கியது. இதில் காணொலி மூலம் வாழ்த்துரை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “கோயில்களை பார்த்துக்கொள்ளக் கூறி  அமைச்சர் சேகர்பாபுவிடம் பொறுப்பை வழங்கினோம். ஆனால், அவர் கோயில்களிலேயே குடியிருக்கும் அமைச்சராக இருந்து வருகிறார்” என்று புகழாரம் சூட்டினார்.

தமிழ்க்கடவுளான முருகப் பெருமானின் பெருமையை உலகில் உள்ள முருக பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில், அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்றும், நாளையும் (ஆக.25) நடைபெறுகிறது. மாநாட்டின் முதல் நாளான இன்றுகாலை 8.30 மணிக்கு திருவிளக்கு ஏற்றுதல் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, மாநாடு நடைபெறும் பழனியாண்டவர் கல்லூரி வளாகத்தில் 100 அடி கம்பத்தில் இரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், மாநாட்டு இலச்சினை பொறிக்கப்பட்ட கொடியை ஏற்றி வைத்தார். காலை 9 மணிக்கு மாநாட்டு கண்காட்சியை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

முதல்வர் ஸ்டாலின்

வேல்கோட்டத்தை, சச்சிதானந்தம் எம்.பி., செந்தில்குமார் எம்எல்ஏ., ஆகியோர் தொடங்கி வைத்தனர். மாநாடு தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக வாழ்த்துரை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:

அறநிலையத்துறையின் செயல்பாடுகள் அனைவரும் பாராட்டும் வகையில் உள்ளது. பழநி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், வளர்ச்சி திட்டப் பணிகளை மேற்கொள்ளவும் பழநியில் 58.77 ஏக்கர் நிலம் ரூ.58 கோடியில் கையகப்படுத்தப்பட உள்ளது.

அறுபடை வீடுகளிலும் ரூ.789 கோடியில் 251 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பழநி முருகன் உட்பட 69 முருகன் கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு உள்ளது. திராவிட மாடல் என்பது எல்லோருக்கும் எல்லாம் என்பது தான். கோயில் சொத்துக்களை அளவீடு செய்யும் பணி நடந்து வருகிறது. அறநிலையத்துறையின் சாதனைகளை புத்தகமாக வெளியிட்டுள்ளோம். அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டும். தமிழக வரலாறு மட்டுமின்றி ஆன்மிக வரலாற்றிலேயே அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இடம் பெறும்” என்று பேசினார்.

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web