வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி... தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

 
காற்றழுத்த தாழ்வு பகுதி

 தமிழகத்தில் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெறும் நிலையில், தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மத்திய மேற்கு, அதையொட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதி மற்றும் வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி

இந்நிலையில், வடதமிழகத்தில் சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், தரைக்காற்று ஓரிரு இடங்களில் மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை சில இடங்களில் இயல்பைவிட அதிகமாக இருக்கக்கூடும்.

புயல் காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 96.8 முதல் 98.6 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 78.8 முதல் 80.6 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக சென்னை மணலியில் 15 செ.மீ. மழை பதிவாகியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web