கேரளா வயநாடு நிலச்சரிவு : பலி எண்ணிக்கை 19ஆக உயர்வு.. மரண ஓலம்... 500 குடும்பங்கள் கதி என்ன?
கேரள மாநிலம் வயநாட்டில் நள்ளிரவில் அடுத்தடுத்து ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவுகளில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளதோடு , 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நிலச்சரிவில் சிக்கியிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மீட்பு பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.கேரள மாநிலம் வயநாட்டில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் லேசான நிலச்சரிவுகள் ஏற்பட்டு வந்தது.
BREAKING: 7 bodies found, hundreds feared trapped as two landslides hit Kerala’s Wayanad last night and early this morning…!#Wayanad #WayanadLandSlide pic.twitter.com/hTBGy52x0u
— நெல்லை செல்வின் (@selvinnellai87) July 30, 2024
இன்று காலை 5:30 மணி வரை அங்கு 300 மில்லி மீட்டர் மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் குரல்மாலா என்ற பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சிக்கிக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
உடனடியாக மாநில பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை துவக்கினர். அப்போது அடுத்தடுத்து 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிகாலை 4 மணி அளவில் முதல் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் சூழல்மலை என்ற இடத்தில் இரண்டாவது நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த இடத்திலும் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்ததால் அவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை. உடனடியாக அந்த இடத்திற்கும் மீட்புப் படையினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளை துவக்கி உள்ளனர்.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்புப் பணிகளில் தொடர்ந்து தொய்வு நிலவி வருகிறது. இதனிடையே மீட்புப் பணிகளில் உதவி செய்வதற்காக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உடனடியாக கேரள மாநிலத்திற்கு விரைந்துள்ளனர். கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் முகாம் அமைத்திருந்த மாநில பேரிடர் மீட்புப் படையினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புப் படையினர் அனைவரும் வயநாடு மாவட்டத்திற்கு விரைந்துள்ளனர். இதனிடையே முண்டகை என்ற இடத்திலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அங்கும் மீட்புப்படையினர் விரைந்துள்ளனர்.
அங்கு மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து மி-17 மற்றும் ஏஎல்எச் ரகங்களை சேர்ந்த இரண்டு ஹெலிகாப்டர்களுடன் விமானப்படை வீரர்கள் இன்று காலை வயநாட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிக்கு செல்லும் பாலம் ஒன்று வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டு இருப்பதால், பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு செல்வதில் சிக்கல் நிலவி வருவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மழையும் பெய்து வருவதால் மீட்பு பணிகளில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அச்சம் நிலவி வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!