கருணாநிதி இன்னும் `லைவ்' ஆக இருக்கிறார்... முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
`கலைஞர் 100' மட்டுமல்ல; இந்தத் தமிழ்நாடும் - தமிழினமும் `கலைஞர் 1000'கூட கொண்டாடும். ஏன் என்றால், தமிழ்நாட்டில் இருக்கும் பல கோடி மக்களுக்கு `லைப்' கொடுத்ததால் தான், கருணாநிதி இன்னும் `லைவ்'-ஆக இருக்கிறார் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
திமுக மகளிர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட `கலைஞர் 100 வினாடி-வினா' போட்டியின் இறுதிப்போட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று நடைபெற்றது. வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
விழாவுக்கு தி.மு.க. துணைப்பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி., நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வினாடி-வினா போட்டியானது 18 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவு, 18 வயதுக்கு உட்பட்டோர் பிரிவு என 2 பிரிவுகளாக நடத்தப்பட்டது. 2 பிரிவுகளிலும் முதல் பரிசு பெற்றவர்களுக்கு ரூ.10 லட்சம், 2-ம் பரிசு பெற்றவர்களுக்கு ரூ.6 லட்சம், 3-ம் பரிசு பெற்றவர்களுக்கு ரூ.3 லட்சம், 4-ம் பரிசு பெற்றவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அந்த வகையில், 18 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில், காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த கபிலன், உதயகுமார், நரேஷ்குமார் குழுவினர் முதல் பரிசையும், 18 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த வள்ளிக்கண்ணு, சித்தி பர்விஷா, தர்ஷினி குழுவினர் முதல் பரிசையும் பெற்றனர்.
பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதவாது: திராவிட இயக்கக் கருத்துகளை இங்கு கூடியிருக்கும் இளைஞர்களின் நெஞ்சில் பதியம்போடும் வகையில் "கலைஞர் 100 வினாடி-வினா" போட்டி நடத்தப்பட்டது. தமிழ் சமுதாயத்தை அடிமைப்படுத்தியவர்களையும் - தமிழினத்தின் வளர்ச்சியை எப்படியாவது தடை செய்திட வேண்டும் என்று உள்நோக்கத்துடன் இருந்தவர்களையும் நோக்கி, பகுத்தறிவுப் பார்வையில் சுயமரியாதை உணர்வுடன் வினா எழுப்பியவர் தான் நம்முடைய தலைவர் கருணாநிதி.
வினா எழுப்பியதோடு இல்லாமல், அரசியல் களத்தில் மறுமலர்ச்சிக்கான சட்டங்களையும், திட்டங்களையும் உருவாக்கி தமிழ் சமுதாயத்திற்கான விடியலாகவும் முன்னேற்றத்திற்கான விடையாகவும் இருந்தார் கருணாநிதி. எனவே, தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டில் வினாடி-வினா போட்டி நடத்தி, "எங்கே திராவிடப் பட்டாளம்?" என்று கேட்பவர்களுக்கு "இதோ இங்கே!" என்று அடையாளம் காட்டியிருக்கிறார் என்னுடைய அருமைத் தங்கை கனிமொழி.
`கலைஞர் 100' மட்டுமல்ல; இந்தத் தமிழ்நாடும் - தமிழினமும் `கலைஞர் 1000'கூட கொண்டாடும். ஏன் என்றால், தமிழ்நாட்டில் இருக்கும் பல கோடி மக்களுக்கு `லைப்' கொடுத்ததால் தான், கருணாநிதி இன்னும் `லைவ்'-ஆக இருக்கிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி, இந்த ஆண்டு நவம்பரில் தான் இந்தப் போட்டி நிறைவடைந்திருக்கிறது. சுமார் 14 மாதங்கள் தமிழ்நாடு முழுவதும் திராவிட இயக்கத்தின் வரலாறு இளம்தலைமுறையிடம் விதைக்கப்பட்டிருக்கிறது. அதன்மூலம் புது சிந்தனைகள் உங்களுக்கு உருவாகியிருக்கும். இந்தச் சிந்தனைகள்தான் இந்த இயக்கத்தை தொடர்ந்து வழிநடத்தும்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேயில் இருந்து, 2 லட்சத்துக்கும் அதிகமான போட்டியாளர்கள் பங்கெடுத்த இந்தப் போட்டியின் வெற்றி என்பது, புது சிந்தனையாளர்களை உருவாக்குவது தான். 2 லட்சம் பேரை திராவிட இயக்கத்தைப் பற்றிப் படிக்க வைத்ததன் மூலமாக, இந்தப் போட்டியின் நோக்கம் நிறைவேறியிருக்கிறது. இப்போது திராவிடக் களஞ்சியமாக நீங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறீர்கள்’ என்றார்.
விழாவில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. பேசியதாவது: திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள், திராவிட இயக்கத்தின் பங்குகள் பணிகள் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக முன்னெடுக்கப்பட்ட ஒரு நிகழ்வு தான் இந்த வினாடி-வினா நிகழ்வு.
எந்த மாநிலத்தில் வெற்றி வந்தால் என்ன? தமிழகம் என்றும் திராவிட இயக்கத்தின் கையில் தான் உள்ளது. அதற்கு அரணாக, இந்த நாட்டின் ஜனநாயகத்தின் கடைசி அரணாக தொடர்ந்து நிற்கக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு எப்போதும் நிற்கும் என்பதை இந்த உலகத்துக்கு எடுத்துக்காட்டுபவர் நமது முதல்-அமைச்சர் அண்ணன் மு.க.ஸ்டாலின். அவரோடு உறுதியாக, அவருக்கு பின்னால் தொடர்ந்து அணி வகுக்கும் தி.மு.க. மகளிர் அணி. அவ்வாறு அணி வகுத்து வெற்றி என்பது தொடர்ந்து நமக்குத்தான் என்றும், இந்த மண்ணை காப்பாற்ற, நாட்டை காப்பாற்றக்கூடியவர்கள் தமிழர்கள் மட்டும் தான் என்பதையும் நிரூபித்துக் காட்டுவோம்” என்று பேசினார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!