"எல்லாம் நன்மைக்கே... " டெல்லி பயணம் குறித்து செங்கோட்டையன் மகிழ்ச்சி!

டெல்லி பயணம் குறித்து, ‘அனைத்தும் நன்மைக்கே’ என்று நெகிழ்ந்து, மகிழ்ச்சியுடன் தனது புன்சிரிப்பை உதிர்த்திருக்கிறார் செங்கோட்டையன்.
முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை மையமாக வைத்து, அதிமுகவில் மீண்டும் அரசியல் பரபரப்பு நிலவி வருகிறது. இரட்டை இலைக்கு இப்போதைக்கு எடப்பாடி தான் அத்தாரிட்டி என்றாலும், தொடர்ந்து அந்த நாற்காலிக்கு பலரும் போட்டியிட்டு வருகின்றனர்.
எப்படியாவது கட்சிக்குள் மீண்டும் நுழைந்து விட வேண்டும் என்று சசிகலா தரப்பினர், ஓபிஎஸ் முதலானோர்கள் முட்டி மோதி, அன்பு காட்டி, பயம் காட்டி வந்தாலும் அசைந்து கொடுக்காமல் இருந்து வருகிறார் எடப்பாடி. மத்தியில் கொடுக்கப்படுகிற அழுத்தங்களுக்கும் இந்த கண்டிஷனைத் தவிர வேற ஏதாவது பேசுவோம் என்று எடப்பாடி கறார் காட்டி வருகிறார்.
கட்சிக்குள் விட்டால் என்னவெல்லாம் நடக்கும்? தனது அரசியல் எதிர்காலம் என்னாகும்? என்பதெல்லாம் அவர் கண் முன் வந்து போகத்தானே செய்யும்? என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். இந்நிலையில் இப்போது புது பிரச்சனையாக செங்கோட்டையன் விவகாரம் மெல்ல ஊதி பெரிசாகி விஸ்வரூபம் எடுக்க துவங்கியிருக்கிறது. தனது டெல்லி பயணம் குறித்த கேள்விக்கு, “அனைத்தும் நன்மைக்கே” என செங்கோட்டையன் பதிலளித்துள்ளது மேலும் பிரச்சனையை பூதாகரமாக்கி இருக்கிறது.
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை தொடங்கியுள்ள நிலையில் கடந்த வாரம் டெல்லி சென்று அமித்ஷாவை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார். கூட்டணி குறித்து பேசவில்லை என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தாலும் கூட்டணிக்கான பேச்சு என்பதை அமித்ஷா உறுதிப்படுத்தினார். அடுத்த சில தினங்களில் கே.ஏ. செங்கோட்டையன் ரகசியமாக டெல்லி சென்று நிர்மலா சீதாராமனை சந்தித்தது அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பியது.
இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக கோபிசெட்டிபாளையத்தில் தனது இல்லத்தில் தங்கி இருந்த கே.ஏ. செங்கோட்டையன் இன்று மீண்டும் டெல்லி செல்வதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் சென்னை செல்வதற்காக ஈரோடு ரயில் நிலையத்திற்கு வந்த அவரிடம் செய்தியாளர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். ஆனால் எதற்கும் பதில் அளிக்காமல் சிரித்தபடி மௌனமாக இருந்த செங்கோட்டையனிடம் தொடர்ந்து மௌனம் காப்பது ஏன் என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் "அனைத்தும் நன்மைக்கே" என பதிலளித்துவிட்டு, கைகளை கூப்பி கும்பிட்டவாறு கடந்து சென்றார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!