பரபரப்பு .. செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்!
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பாபு (25) . இவர் போதை பழக்கத்திற்கு அடிமையாகி, தன்னைத்தானே கத்தியால் கீறி காயம் ஏற்படுத்தி கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். மேலும், பேர்ணாம்பட்டு நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ள சுமார் 200 அடி உயர செல்போன் டவரில் ஏறி, அதிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வதாக அச்சுறுத்தி மிரட்டி வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் பேர்ணாம்பட்டு டவுன், திருவிக நகரில் வசிக்கும் வட மாநிலத்தை சேர்ந்த அப்ரான் கான் என்பவரிடம் தகராறில் ஈடுபட்டதோடு கத்தியை எடுத்து கழுத்தில் குத்தியுள்ளார். இந்த நிலையில் அப்ரான் கான் கொடுத்த புகாரின் பேரில் பேரணாம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
அப்போது மீண்டும் பேர்ணாம்பட்டு நெடுஞ்சாலை பகுதியில் தான் வழக்கமாக ஏறும் செல்போன் டவரில் ஏறி உச்சிக்கு சென்ற பாபு, அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியுள்ளார். இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த பேர்ணாம்பட்டு காவல்துறையினர் பாபுவிடம் பேச்சுவார்த்தை நடத்தி கீழே வரவைத்துள்ளனர். இதனை நம்பி பாபு கீழே வந்த நிலையில், உடனே அவரை கைது செய்து, அப்ரான் கானை கத்தியால் குத்திய வழக்கில் பாபுவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.