மதுரையில் என்கவுன்டரில் சுட்டுக்கொலை... நடந்தது என்ன?!

 
துப்பாக்கி போலீசார் கொலை என்கவுன்ட்டர்

மதுரையில் பிரபல ரவுடி வெள்ளக்காளியின் நெருங்கிய கூட்டாளி போலீசாரால் என்கவுன்ட்டரில் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். மதுரை காமராஜர்புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வி.கே.குருசாமி, ராஜபாண்டியன். உறவினர்களான இவர்களுக்கு இடையே உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக முன்பகை ஏற்பட்டது. இதன் காரணமாக இரு தரப்பிலும் பழிக்குப்பழியாக பல கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த 22 ஆண்டுகளில் இரு தரப்பிலும் 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தனக்கன்குளம் மொட்டமலை பகுதியில் கடந்த 22ம் தேதி வி.கே.குருசாமியின் சகோதரி மகன் கிளாமர் காளி என்ற காளீஸ்வரன் (35) என்பவரை 8 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இது தொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவின்பேரில் தனிப்படை போலீஸார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய மதுரையைச் சேர்ந்த சுள்ளான் பாண்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். பிரபல ரவுடி வெள்ளக்காளியின தாயார் உட்பட 7 பேரை தனிப்படையினர் தேடி வந்தனர்.

மதுரை என்கவுண்டர் போலீசார்

கடந்த 29-ம் தேதி மதுரை கல்மேடு எம்ஜிஆர் நகர் நந்தகுமார் (20), சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகிலுள்ள மணல்மேடு முத்துகிருஷ்ணன் (18), மதுரை ஸ்டேட் பேங்க் காலனி அசேன் (32), சென்னை கொளத்தூர் ஜவகர் நகர் கார்த்திக் (28), மதுரை காமராஜர்புரம் கக்கன் தெரு நவீன் (22), மணல்மேடு பாலகிருஷ்ணன் (26), காமராஜர்புரம் ஜெயக்கொடி (65) ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வழக்கில் தொடர்புடைய பங்கஜம் காலனியை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (26) என்பவரை தொடர்ந்து தேடி வந்தனர். இவர் பிரபல ரவுடி வெள்ளக்காளியின் நெருங்கிய கூட்டாளியாவார்.

இந்நிலையில் மதுரை சிந்தாமணி பகுதியில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த சுபாஷ் சந்திரபோஸை திங்கள்கிழமை மாலை காவல் ஆய்வாளர் பூமிநாதன் தலைமையிலான தனிப்படையினர் பிடிக்க முயன்றனர். அப்போது, தனிப்படையினரை சுபாஷ் சந்திரபோஸ் அரிவாளால் போலீசாரை தாக்கிவிட்டு தப்பினார். அவரை ஜீப்பில் காவல் ஆய்வாளர் பூமிநாதன் விரட்டிச் சென்றார். சிந்தாமணி பகுதியில் சுபாஷ் சந்திரபோஸை பிடிக்க முயன்ற போது, அவர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதையடுத்து தற்காப்புக்காக பூமிநாதன் துப்பாக்கியால் சுட்டதில் சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்தார். சுபாஷ் சந்திரபோஸ் அரிவாளால் தாக்கியதில் காயமடைந்த 2 போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சுபாஷ் சந்திரபோஸின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் காவல் துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். காவல் ஆய்வாளர் தற்காப்புக்காக சுட்டத்தில் சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்தார் என காவல் ஆணையர் லோகநாதன் கூறினார்.

என்கவுண்டர் சுட்டுக்கொலை

மதுரை என்கவுன்ட்டர் குறித்து காவல் ஆணையர் லோகநாதன் கூறியது: சமீபத்தில் ஆஸ்டியன்பட்டி காவல் நிலைய எல்லையில் கொலையுண்ட கிளாமர் காளீஸ்வரன் கொலையில் சுபாஷ் சந்திரபோஸ் தேடப்பட்டு வந்தார். பெருங்குடி பகுதியில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சோதனை சாவடியில் சந்தேகத்தின் பேரில் சுபாஷ் சந்திரபோஸை போலீஸார் நிறுத்த முயன்றனர். அவர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் 2 போலீஸாரை தாக்கிவிட்டு தப்பினார். இதைத்தொடர்ந்து தனிப்படை காவல் ஆய்வாளர் பூமிநாதன் போலீஸ் ஜீப்பில் துரத்திச் சென்றார்.

சிந்தாமணி விலக்கு அருகே அவரை பிடிக்க முயன்ற போது, சுபாஷ் சந்திரபோஸ் காவல் ஆய்வாளரை துப்பாக்கியால் சுட்டார். போலீஸ் ஜீப்பில் குண்டு பாய்ந்தது. இருப்பினும், தற்காப்புக்காக காவல் ஆய்வாளர் திருப்பி துப்பாக்கியால் சுட்டத்தில் சுபாஷ் சந்திரபோஸ் மயங்கி விழுந்தார். அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனாலும், அவர் வழியிலேயே உயிரிழந்தது தெரிந்தது. இதன்பின் அவரது உடல் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சட்டத்தின்படி ரவுடிகளை ஒடுக்க நடவடிக்கை எடுக்கிறோம். ஆய்வாளரை தாக்க முயன்றதால் தற்காப்புக்காக சுட்டத்தில் சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்தார்’ என்றார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web