லீவு கிடைக்கும்... 5 வயது சிறுவனை அடித்துக் கொன்ற மாணவர்கள்!
டெல்லி, பிஜ்புரி பகுதியில் செயல்பட்டு வரும் மதரஸா ஒன்றில் 5 வயது சிறுவன் ஒருவன் கடந்த 5 மாதங்களாப் படித்து வந்துள்ளார். இந்நிலையில், சிறுவனுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் சிறுவனின் தாய்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மதரஸாவுக்குச் சென்ற சிறுவனின் தாய் பிரிஜ்புரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு தனது மகனை கொண்டு சென்றுள்ளார். அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டு கதறித் துடித்த தாய் மற்றும் உறவினர்கள் சிறுவனின் உடலை மதரஸாவுக்கு கொண்டு சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், மதரஸாவில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 9.52 மணியளவில் சிறுவன் ஒருவன் இறந்துவிட்டதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டு, உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மருத்துவமனைக்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததைத் தொடர்ந்து அங்கிருந்த உறவினர்கள் கலைந்து சென்றனர்.
இதைத்தொடர்ந்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில் மதரஸாவில் படிக்கும் 3 சிறுவர்களால் சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 3 மாணவர்களுமே 9 முதல் 11 வயதுக்கு உட்பட்டவர்கள்தான். உயிரிழந்த சிறுவனின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சிறுவனுக்கு பல்வேறு உள்காயங்கள் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அவரது கல்லீரல் சிதைந்து, வயிறு மற்றும் வலது நுரையீரலில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, கொலை செய்த 3 சிறுவர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சிறுவனை ஏன் அடித்துக் கொன்றீர்கள் என்று போலீசார் கேட்டபோது சிறுவன் கெட்ட வார்த்தை பேசியதால் அடித்ததாகவும், சிறுவன் உயிரிழந்தால் மதரஸாவில் விடுமுறை அளிக்கப்படும் என்பதால் அடித்துக் கொன்றதாகவும் கூறியுள்ள சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
இந்நிலையில், சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் மூலமாக இந்த கொலை சம்பவத்தை போலீசார் உறுதி செய்துள்ளனர். வேறு யாருக்காவது இந்த கொலையில் தொடர்புள்ளதாக என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பம் தொடர்பாக பாரதிய நியாய சன்ஹிதா சட்டப் பிரிவு 103 இன் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்த 3 சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா