2 மாநில சட்டப்பேரவை... 2 மக்களவை... இன்று வாக்கு எண்ணிக்கை!
இந்தியாவில் மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல்கள் சமீபத்தில் நடத்தப்பட்டன. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட உள்ளன.அதே போல 2 மாநிலங்களில் 2 மக்களவை தொகுதி இடைத்தேர்தல், 13 மாநிலங்களில் 48 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகளும் வெளியாக உள்ளது. இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கும் நவம்பர் 20ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. அங்கு பாஜக, சிவசேனா (ஷிண்டே அணி), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ் , சிவசேனா (உத்தவ் தாக்கரே), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) மகா விகாஸ் அகாடி கூட்டணியும் தேர்தலில் களம் இறங்கியுள்ளன.
அதே போல ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 தொகுதிகளில் 43 தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 13ம் தேதியும், மீதம் உள்ள 38 தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 20ம் தேதியும் நடைபெற்றது. இதில், ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா , காங்கிரஸ் , ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகளின் இந்தியா கூட்டணியும், பாஜக தலைமையிலான NDA கூட்டணியும் நேரடி களம் காண்கின்றன.
அடுத்து, கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நவம்பர் 13ல் தேர்தல், மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட் மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நவம்பர் 20ல் வாக்குப்பதிவு நடைபெற்ற தொகுதிகளின் முடிவுகளும் இன்று வெளியாக உள்ளன.
இதேபோல, 13 மாநிலங்களில் 48 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகளும் வெளியாக உள்ளன.
அதன்படி
அஸ்ஸாம் – 5 தொகுதிகள்
பீகார் – 4 தொகுதிகள்
சத்தீஸ்கர் – 1 தொகுதி
குஜராத் – 1 தொகுதி
கேரளா – 2 தொகுதிகள்
கர்நாடகா – 3 தொகுதிகள்
மத்திய பிரதேசம் – 2 தொகுதிகள்
மேகாலயா – 1 தொகுதி
பஞ்சாப் – 4 தொகுதிகள்
ராஜஸ்தான் – 7 தொகுதிகள்
சீக்கிம் – 2 தொகுதிகள்
உத்திரப்பிரதேசம் – 9 தொகுதிகள்
உத்திரகாண்ட் – 1 தொகுதி
மேற்கு வங்கம் – 6 தொகுதிகள்
என மொத்தம் 48 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகளும் இன்று வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.