சபரிமலை 18ம் படியில் குரூப்-போட்டோ எடுத்த போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை!

 
சபரிமலை குரூப் போட்டோ
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 18ம் படி மீது அமர்ந்து போலீசார் குரூப் போட்டோ எடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து விசாரணை நடத்த சன்னிதானம் எஸ்பிக்கு ஏடிஜிபி ஸ்ரீஜித் உத்தரவிட்டுள்ளார். 

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மிகவும் புனிதமாக கருதப்படும் ஒன்று பதினெட்டாம் படி. மாலையணிந்து கடும் விரதம் இருந்து இருமுடி கட்டி வரும் பக்தர்கள் மட்டுமே பதினெட்டாம் படி ஏற அனுமதிக்கப்படுவார்கள்.

அதிலும் பக்தர்கள் படியில் ஏறிச் செல்ல மட்டுமே அனுமதிக்கப்படுவார்களே தவிர படிகளின் வழியே இறங்கி வர அனுமதி கிடையாது. பந்தள மன்னரின் பிரதிநிதிகள், கோவிலில் தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோர் மட்டுமே பதினெட்டாம் படியில் மேலே இருந்து கீழே இறங்க அனுமதி உள்ளது.

சபரிமலை

அவ்வாறு அவர்கள் இறங்கும் போது பின்நோக்கியே இறங்குவார்கள். சாமிக்கு மரியாதை கொடுக்கும் வகையில் பின்நோக்கி வரக்கூடிய மரபே சபரிமலையில் இது காலம் வரையில் தொன்றுத்தொட்டு பின்பற்றப்பட்டு வருகிறது. இருமுடி கட்டாமல் பதினெட்டாம் படியில் ஏறுவதற்கு, அங்கு பக்தர்களை படியேற உதவக்கூடிய போலீசார் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

அவர்களும் பல்வேறு நடைமுறைகளை பின்பற்றியே பதினெட்டாம் படியில் நிற்பார்கள். இந்நிலையில் பதினெட்டாம் படியில் பணியில் இருந்த போலீசார், அதில் நின்று குரூப்-போட்டோ எடுத்திருக்கின்றனர். அதிலும் தங்களின் பின்புறத்தை காண்பித்து நின்று கொண்டு புகைப்படம் எடுத்திருக்கின்றனர்.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது. சபரிமலையில் மிகவும் புனிதமாக மதிக்கப்படும் பதினெட்டாம் படியில் போலீசார் இவ்வாறு நடந்து கொண்டது பக்தர்களின் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசாரின் இந்த செயலுக்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்தன. மேலும் சபரிமலையின் ஆச்சார விதிகளை மீறிய போலீசாரின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதையடுத்து பதினெட்டாம் படியில் போலீசார் குரூப்-போட்டோ எடுத்துக் கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் சபரிமலை மரபுகளை மீறும் வகையில் போலீசார் செயல்பட்டது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சன்னிதான எஸ்பி பைஜூவுக்கு கேரள மாநில ஏ.டி.ஜி.பி. ஸ்ரீஜித் உத்தரவிட்டார்.

சபரிமலை

இதையடுத்து எஸ்பி பைஜூ விசாரணையை தொடங்கினார். பதினெட்டாம் படியில் பக்தர்களுக்கு உதவும் பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசார் 12 நாட்களுக்கு ஒரு முறை மாற்றப்படுவார்கள். அது போன்று தான் கடந்த 14-ந்தேதி பணிக்கு வந்த போலீசார், 25-ந்தேதியுடன் பணி முடிந்து புறப்படும் போது, மதியம் கோவில் நடை சாத்தப்பட்டிருந்த நேரத்தில் பதினெட்டாம் படியில் நின்று குரூப் போட்டோ எடுத்துள்ளனர்.

பதினெட்டாம் படியில் குரூப்-போட்டோ எடுத்துக்கொண்ட சம்பவம் தொடர்பாக அவர்களுக்கு பொறுப்பாக பணியில் இருந்த போலீஸ் அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில் குரூப்-போட்டோ எடுத்துக்கொண்ட 30 போலீசாரின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web