இயக்குநர் மோகன் ஜி கைது... பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை.. அதிர வைத்த பேட்டி!

 
ஜி மோகன்
 


திரௌபதி, பகாசுரன் உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களிடையே பிரபலமான இயக்குநர் மோகன் ஜியை சென்னையில் இன்று காலை போலீசார் கைது செய்துள்ளனர். எந்த வழக்கில் இயக்குநர் மோகன் ஜியைக் கைது செய்துள்ளனர் போன்ற விவரங்கள் ஏதும் அவரது மனைவிக்கு தெரிவிக்கப்படவில்லை என்கிற செய்திகள் வெளியான நிலையில், அவரது சமீபத்திய பேட்டியில், பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள் கலக்கப்பட்டதாக கூறியிருந்தது தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கலாம் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. 

திருமலையில் லட்டு பிரசாதத்திற்கு பயன்படுத்தப்படும் நெய்யில், பன்றிக் கொழுப்பு, மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலக்கப்பட்டதாக புகார் எழுந்து அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பழனி பஞ்சாமிர்தம் குறித்தும் பலரும் தங்களது சந்தேகங்களைக் கிளப்பினார்கள். 

இது தொடர்பாக பேசிய இயக்குனர் மோகன் ஜி, "எப்படி மனசாட்சி துளி கூட இல்லாம இத்தனை கோடி மக்கள் நம்பிக்கையில் விளையாடி இருக்கீங்க.. வைணவ முத்திரை வாங்கியவர்கள் எத்தனை லட்சம் பேர் புனிதமாக வாழ்ந்து வருகிறார்கள். இதை செய்த கொடிய மிருகங்களுக்கு கொடுரமான தண்டனை வழங்க வேண்டும். இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்கள்" என தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு தனது கோபத்தை வெளிபடுத்தி இருந்தார்.

இந்நிலையில் தமிழக பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன், இயக்குனர் மோகன் ஜி தமிழக போலீசாரால், கைது செய்யப்பட்டுள்ளதாக தனது எக்ஸ் பக்கத்தில் தகவல் வெளியிட்டு இருக்கிறார்.

அந்த பதிவில்,"சினிமா இயக்குனர் நண்பர் திரௌபதி மோகன் ஜி அவர்கள் சற்று முன் தமிழக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். என்ன காரணம், எந்த வழக்கு என்று எந்த முறைப்படியான தகவலும் குடும்பத்தினருக்கு கூறப்படவில்லை. இது உச்சநீதிமன்ற ஆணைக்கு எதிரானது. அவர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவலும் இல்லை. திமுகவினுடைய ஆட்சி அமைந்ததிலிருந்து எதிர்கருத்து பேசுபவர்கள் சட்டத்திற்கு புறம்பான முறையில் கைது செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது. கஞ்சா கள்ளச்சாரயத்தை கட்டுப்படுத்த முடியாத திராவிட மாடலின் காவல்துறை இதுமாதிரியான ஒடுக்குமுறைகளை மட்டும் சரியாக செய்கிறது." என பதிவிட்டுள்ளார். 

மோகன்

இதனையடுத்து மோகன் ஜி தரப்பை தொடர்பு கொண்டு உண்மை நிலவரம் என்ன என விசாரிக்க முற்பட்டபோது அது தொடர்பான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. அவரது செல்போன் எண்ணும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வெளியானது.

அதில் பேசியிருந்த இயக்குனர் மோகன் ஜி, நமக்குத் தெரிந்த கோவில் ஒன்றில் பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள் கலந்து பக்தர்களுக்கு வழங்கப்படுவதாக தான் செவி வழிச் செய்தியாக கேள்விப்பட்டதாக தெரிவித்து இருந்தார். தொடர்ந்து அந்த சேனலின் நெறியாளர் பழனி கோவிலை குறிப்பிடுகிறீர்களா என கேட்டதற்கு, " நான் கேள்விப்பட்டதை தான் சொன்னேன்" என பேசி இருந்தார்.

பழனி பஞ்சாமிர்தம் குறித்த பேச்சு காரணமாகவே மோகன் ஜி கைது செய்யப்பட்டு இருக்கலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது.காவல் துறை தரப்பில் இது தொடர்பான எந்த அறிவிப்பும் இதுவரையில் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web