தொடரும் சோகம்... ஒரே மாதத்தில் 6 பேர் பலி... வெள்ளியங்கிரி மலை ஏறிய போது பக்தர் மூச்சுத்திணறி பலி!
கோவை மாவட்டம் வெள்ளிங்கிரி மலை மீது ஏறும் பக்தர்கள் அடுத்தடுத்து மூச்சுத்திணறி உயிரிழந்தனர். இதனையடுத்து தற்காலிக மருத்துவ பரிசோதனை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த வரிசையில் நேற்று சென்னை பக்தர் மூச்சுத்திணறி பலியானார். இந்த மாதத்தில் இது 6வது பலி என்பதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை முகப்பேரில் வசித்து வருபவர் 50 வயது ரகுராம். இவர் கம்பெனிகளுக்கு தொழிலாளர்களை அனுப்பும் நிறுவன உரிமையாளர். இவரது மனைவி 45 வயது ஷீலா, 22 வயது மகள் வர்ஷினி. இவர் அடிக்கடி கோவை அருகே உள்ள பூண்டி வெள்ளிங்கிரி மலைக்கு வந்து சிவனை தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
அதன்படி தனது நண்பர்கள் 15 பேருடன் சென்னையில் இருந்து நேற்று முன்தினம் கோவை வந்து சேர்ந்தார். மாலை 6 மணிக்கு மலை ஏறினார். நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் 5வது மலை ஏறியபோது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு ரகுராம் மயங்கி கீழே சரிந்தார். சக நண்பர்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களுடைய உடனடி நடவடிக்கை படி டோலி மூலம் ரகுராமை அதிகாலை 4 மணிக்கு மலை அடிவாரத்துக்கு கொண்டு வந்தனர்.
அங்கு தயாராக இருந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ரகுராமை சோதனை செய்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து ரகுராமின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கோவை விரைந்தனர். விசாரணையில் ரகுராமுக்கு நீரிழிவு நோய் இருந்தது உறுதி செய்யப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை வெள்ளிங்கிரி மலை ஏறிய 5 பேர் அடுத்தடுத்து உயிரிழந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!