தமிழகத்தில் இந்த 10 மாவட்டங்களில் வேகமெடுக்குது டெங்கு காய்ச்சல்... மழைக்காலங்களில் கவனம் மக்களே!
மழைக்காலங்களில் ரொம்பவே கவனமாக இருங்க மக்களே.. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல மாவட்டங்களிலும் மழை பெய்ய துவங்கியிருக்கிறது. அடுத்து வரும் 6 நாட்களுக்கும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அதே சமயம் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மழைக்கால தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழக சுகாதாரத்துறை டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், “கடந்தாண்டு தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக டெங்கு பாதிப்பு தமிழகத்தில் பெரிய அளவில் இல்லை. 80 நாடுகளில் டெங்கு பாதிப்பு இருந்தது. இது வரை தமிழகத்தில் டெங்கு பாதிப்பு இல்லை.
2012 ல் 66 டெங்கு உயிரிழப்புகளும், 2017 ல் 65 டெங்கு உயிரிழப்புகளும் பதிவாகி இருந்தது. இந்தாண்டு ஜனவரி 1 முதல் தற்போது வரையில் 11,743 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். டெங்கு வந்ததும் உடனடியாக சிகிச்சை பெற்றுக் கொண்டால் உயிரிழப்புக்கள் ஏற்படுவதில்லை. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் கர்ப்பிணிகள் குழந்தைகள் தான் டெங்குவால் அதிகம் பாதிப்படுகின்றனர். தினமும் 400 – 500 என்ற அளவில் டெங்கு பாதிப்பு தமிழ்நாட்டில் உள்ளது.
டெங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் மருந்துகள் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்னரே நோயாளிகளுக்கு கொடுக்கப்டுகின்றன. குறிப்பாக இதுவரை பதிவான 11,743 பேருக்கான டெங்கு பாதிப்பில் 57.6 சதவீதம் சென்னை, கோவை , மதுரை , திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, திருப்பூர் உட்பட 10 மாவட்டங்களில் இருந்து மட்டும் பதிவாகியுள்ளது.
அந்த குறிப்பிட்ட மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு குறித்த ஆய்வுகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், தடுப்பு முறைகளையும் மேற்கொண்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
நோய் வருமுன் காப்பது தான் புத்திசாலித்தனம். அதனால், மழைக்காலங்களில் தண்ணீரை நன்கு காய்ச்சி, வடிகட்டிப் பயன்படுத்துங்க. வீட்டிற்குள்ளும், வீட்டைச் சுற்றிலும் சுத்தமாக வைத்திருங்கள். மழை நீர் தேவையில்லாத பொருட்களில், இடங்களில் தேங்கி நிற்பதைத் தவிர்த்திடுங்க. கொட்டாங்குச்சி, பிளாஸ்டிக் பக்கெட் போன்றவைகளில் கூட சிறிய அளவாக இருந்தாலும் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். இதெல்லாமே கொசுக்கள் உற்பத்தியை அதிகரிக்கும்.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா