நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29ம் தேதி வரை நீதிமன்ற காவல்!
சென்னையில் நவம்பர் 3ம் தேதி பிராமணர் சமூகத்தினர் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி உரையாற்றினார். இந்த உரை, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து நடிகை கஸ்தூரி தனது பேச்சை திரும்ப பெறுவதாக கூறி பகிரங்க மன்னிப்பு கோரினார். இருப்பினும், நடிகை கஸ்தூரிக்கு எதிராக சென்னை , திருச்சி, மதுரை உட்பட பல இடங்களிலும் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதைத்தொடர்ந்து அவர் முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளுபடி செய்து நவம்பர் 14ம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளார். நடிகை கஸ்தூரியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து தலைமறைவாகியுள்ளார் . அவரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். தமிழ்நாடு மற்றும் ஆந்திரா, தெலுங்கானா உட்பட மாநிலங்களிலும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து நடிகை கஸ்தூரி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள பப்பலக்குடா பகுதியில் சினிமா தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணனின் பங்களா வீட்டில் பதுங்கி இருப்பதாக சென்னை தனிப்படை போலீசாருக்கு நேற்று கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் அங்கு சென்று நடிகை கஸ்தூரியை கைது செய்தனர். இந்நிலையில், ஐதராபாத்தில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரியை போலீசார் இன்று சென்னை அழைத்து வந்தனர்.
சிந்தாதிரிப்பேட்டை காவல் துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகை கஸ்தூரி ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணைக்கு பின் நடிகை கஸ்தூரியை வரும் 29ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னதாக நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய அழைத்து செல்லப்பட்ட போது, 'அரசியல் அராஜகம் ஒழிக, நீதி வெல்லட்டும்' என கோஷம் எழுப்பினார் நடிகை கஸ்தூரி.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!