தொடர் மழை... வெள்ளத்தில் நனைத்து வீணாய் போன ரூ.400 கோடி!

 
வெள்ளம் பணம்

ஆயிரம்... பத்தாயிரம்... லட்சம்... கோடி எல்லாம் கிடையாது... சொளையாக ரூ.400 கோடி மக்களின் பணம். பிரபல வங்கிக்குள் புகுந்த மழை வெள்ளத்தில் சிக்கி, ரூ.400 கோடியும் நனைத்து, பயன்படுத்தவே முடியாத அளவுக்கு வீணாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் கடந்த செப்டம்பர் மாதம் 22, 23-ம் தேதிகளில் கனமழை பெய்தது. கனமழை காரணமாக நாக்பூர் நகரமே வெள்ளத்தில் மூழ்கியது. இதனிடையே, நாக் ஆற்றங்கரையோரம் பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் மண்டல அலுவலகம் இருக்கிறது. இந்த அலுவலகத்திலிருந்துதான் நாக்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள வங்கிகளுக்குப் பணப் பட்டுவாடா செய்யப்பட்டு வந்தது. இதற்காக ரிசர்வ் வங்கி பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டிருந்தது.

ரிசர்வ் வங்கியிலிருந்து பணம் நேரடியாக பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவில் டெலிவரி செய்யப்படும். அங்கிருந்து மற்ற வங்கிகளுக்கு எடுத்துச்செல்லப்பட்டு டெலிவரி செய்யப்படும். அதேபோன்று மற்ற வங்கிகள் கொடுக்கும் பணமும் நாக்பூர் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா மண்டல அலுவலகத்தில் சேமிக்கப்படும். இந்த மண்டல அலுவலகத்தில் பணம் இருந்த அறைக்குள், மழை வெள்ளம் புகுந்தது. தண்ணீர் பல அடி உயரத்துக்கு வங்கிக்குள் சேர்ந்தது. வங்கியில் இருந்த தண்ணீரை வெளியில் அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் 24 மணி நேரம் எடுத்துக்கொண்டனர்.

மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றவே மாநகராட்சி ஊழியர்களுக்கு ஒரு நாள் எடுத்துக்கொண்டதால், வங்கியில் இருந்த பணம் முழுக்க தண்ணீரில் மூழ்கி வீணானது. இதில் அதிகப்படியான பணம் பயன்படுத்த முடியாத அளவுக்கு வீணாகி விட்டது. ரூ.400 கோடி அளவுக்குப் பணம் வீணாகி விட்டதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் பார்வையிட்டனர். சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை அதிகாரிகள் எண்ணி ஸ்கேன் செய்து கணக்கில் எடுத்துக் கொண்டனர். அந்த ரூபாய் நோட்டுகளுக்கு பதிலான மாற்று ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி வழங்கியது.

அதேசமயம் வெள்ளத்தில் ரூபாய் நோட்டுகள் அடித்துச்செல்லப்பட்டிருந்தால், அந்தப் பணத்துக்கான இழப்பை வங்கி நிர்வாகம்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்து விட்டது. மழை வெள்ளம் புகுந்ததால் வங்கி சேவை பாதிக்கப்படவில்லை. வெள்ளம் வங்கிக்குள் புகுந்தபோதும் தொடர்ந்து அதே மண்டல வங்கியில்தான் இப்போதும் ரிசர்வ் வங்கி பணப் பரிவர்த்தனையை மேற்கொள்கிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினை ஏற்படாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web