பத்லாபூர் மாணவிகள் பலாத்காரம்... குற்றவாளி என்கவுண்டரில் சுட்டுக்கொலை!
மகாராஷ்டிரா மாநிலம், பத்லாபூரில் உள்ள ஒரு பள்ளியில் 4 வயது சிறுமிகள் இருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஷிண்டே, போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்ட போது ஒரு போலீஸ்காரரின் துப்பாக்கியைப் பறித்து, அவர் மீது இரண்டு ரவுண்டுகள் சுட்டதை அடுத்து, போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சுட்டுக் கொல்லப்பட்டான்.
கடந்த மாதம் பத்லாபூரில் உள்ள ஒரு பள்ளியில் நான்கு வயது சிறுமிகள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அக்ஷய் ஷிண்டேவை கடந்த திங்கள்கிழமை மாலை என்கவுன்டரில் தானே காவல்துறை குற்றப்பிரிவு போலீசார் சுட்டுக் கொன்றனர்.
கடந்த வாரம் ஷிண்டேவை பிரிந்த இரண்டாவது மனைவி போயசர் காவல் நிலையத்தில் பதிவு செய்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக தானே குற்றப்பிரிவு தலோஜா மத்திய சிறையில் இருந்து ஷிண்டேவை அழைத்துச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 24 வயதான ஷிண்டே மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 (இயற்கைக்கு மாறான செக்ஸ்) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு தானேவுக்கு மாற்றப்பட்டு குற்றப்பிரிவு விசாரணைக்கு வந்தது.
ஷிண்டேவை திங்கள்கிழமை மாலை 5.30 மணியளவில் தலோஜா சிறையில் இருந்து காவலில் எடுத்து சென்றனர். சிறைச்சாலையில் இருந்து சுமார் 10 பேர் கொண்ட குழு ஷிண்டேவை காவல் வாகனத்தில் அழைத்துச் சென்றனர். ஷிண்டேக்கு அருகில் நான்கு ஆயுதமேந்திய அதிகாரிகள் அமர்ந்திருந்தனர் என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இவர்களது வாகனம் மும்ப்ரா புறவழிச்சாலையை அடைந்ததும், உதவி காவல் ஆய்வாளர் நிலேஷ் மோரின் கைத்துப்பாக்கியை ஷிண்டே பறித்து, மூன்று ரவுண்டுகள் அவரை நோக்கி சுட்டதில் ஒரு குண்டு அவரது தொடையில் தாக்கியது. பதிலுக்கு, சீனியர் இன்ஸ்பெக்டர் சஞ்சய் ஷிண்டே, அக்ஷய் ஷிண்டே மீது ஒரு ரவுண்டு சுட்டார். அது ஷிண்டேவின் தலையில் தாக்கியது. பின்னர் கல்வாவில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் மருத்துவமனைக்கு ஷிண்டே கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஷிண்டே ஏற்கெனவே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
திங்கள்கிழமை மாலை ஷிண்டேவின் உடல் பிரேத பரிசோதனைக்காக மும்பையில் உள்ள ஜேஜே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.