நடந்து சென்ற இளைஞரிடம் வழிப்பறி.. ஜி - பேயில் ரூ.29 ஆயிரத்தை ஆட்டைய போட்ட சிறுவன் உட்பட 5 பேர் கைது!
அம்பத்தூர் லெனின் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயதேவ் (20). தனியார் கல்லூரியில் பி.டெக் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் (நவ.13) ஜெயதேவ் தனது நண்பர் ராஜாவை பார்க்க சென்றார். அண்ணா தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத சிலர் அவரை மிரட்டி அருகில் உள்ள பழைய கட்டிடத்திற்கு அழைத்துச் சென்று பணம் கேட்டுள்ளனர். ஆனால் ஜெயதேவ் பணம் கொடுக்க மறுத்ததால் பீர் பாட்டிலால் தலையில் தாக்கியுள்ளனர்.
இதில் பலத்த காயம் அடைந்த ஜெயதேவ் கீழே விழுந்தார். பின்னர், செல்போனை எடுத்து மிரட்டி, அதில் இருந்த 'ஜி-பே' ஆப் மூலம் அவர்களது மொபைல் எண்ணுக்கு ரூ.29 ஆயிரத்தை அனுப்பிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அதன்பின், பலத்த காயமடைந்த ஜெயதேவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். பின்னர், திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் ஜெயதேவ் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, 5 வாலிபர்கள் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, சிசிடிவி காட்சிகள் மற்றும் பணப் பரிவர்த்தனை எண்களைக் கொண்டு விசாரணை நடத்தியதில், கொள்ளையில் ஈடுபட்ட 5 பேர் திருமுல்லைவாயிலைச் சேர்ந்த ராஜா (22), ஜெயசூர்யா (20), கபிலேஸ்வரன் (18), லலித்குமார் (22), 17 வயது சிறுவன் உட்பட அனைவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அதையடுத்து, கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.25 ஆயிரத்தை பறிமுதல் செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். நடந்து சென்ற இளைஞரிடம் கொள்ளையடித்த 17 வயது சிறுவன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!