பள்ளியில் ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு.. 3 மாணவர்கள் காயம் - பெரும் பரபரப்பு !!

 
school

அரசு பள்ளியில் ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு, தடுக்க முயன்ற 3 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

விழுப்புரம் அடுத்த கோலியனூரில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையம் கிராமத்தை சேர்ந்த நடராஜன் என்பவர் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இதற்காக பள்ளி அருகே தங்கியிருந்து, தினசரி பள்ளிக்கு வந்து செல்வார்.

ஆசிரியர் நடராஜனுக்கும், அவரது மூத்த சகோதரரான ஸ்டாலின் என்பவருக்கும் இடையே நீண்ட காலமாக சொத்து தகராறு இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கோலியனூர் அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு சென்ற ஸ்டாலின், மதிய உணவு இடைவேளையின் போது ஆசிரியரான தனது தம்பி நடராஜனை அழைத்து சொத்து தொடர்பாக பேசியுள்ளார்.

school

அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதில் திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தனது தம்பியான ஆசிரியர் நடராஜனை, ஸ்டாலின் சரமாரியாக வெட்டியுள்ளார். பள்ளி வளாகத்தில் ஆசிரியர் நடராஜனை ஒருவர் அரிவாளால் வெட்டுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த மாணவர்கள் சிலர் ஓடி சென்று தடுத்துள்ளனர். இதில் 11ஆம் வகுப்பு மாணவர்களான மனோஜ், ஆகாஷ், முருகன் உள்ளிட்ட மூன்று பேருக்கு கையில் காயம் ஏற்பட்டது.

இருப்பினும் மாணவர்கள் ஒன்று சேர்ந்து ஸ்டாலினை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த வளவனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஸ்டாலினை கைது செய்து அரிவாளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, ஆசிரியர் நடராஜனை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல் காயமடைந்த 3 மாணவர்களும் மருத்துவமனையில் உரிய சிகிச்சை பெற்றனர்.

school

இதற்கிடையே பள்ளி வளாகத்துக்குள் புகுந்து வெறிச்செயலில் ஈடுபட்ட ஸ்டாலினை போலீஸ் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சொத்து பிரச்சினையில் தம்பியை கொலை செய்ய திட்டமிட்டு வந்ததாக ஸ்டாலின் வாக்கு மூலம் அளித்து உள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web