பெரும் சோகம்... மேம்பாலத்தில் பழுதாகி நின்ற லாரி மீது பைக் மோதி 2 பள்ளி மாணவர்கள் பலி!
வேலூர் மாவட்டத்தில் வேலூர் பேருந்து நிலையம் அருகே மேம்பாலத்தில் பழுதாகி நின்ற லாரி மீது பைக் மோதியதில் 2 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து மாவட்ட எஸ்பி நேரில் ஆய்வு செய்தார். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் வசித்து வருபவர் 50 வயது துளசிராமன் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் ராணிப்பேட்டையில் இரும்பு பைப்புகளை லாரியில் ஏற்றிக்கொண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு நேற்று அதிகாலை புறப்பட்டார். சுமார் 3.30 மணிக்கு வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென லாரி பழுதானது.
இதனால் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு துளசிராமன், தேசிய நெடுஞ்சாலை ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர், தேசிய நெடுஞ்சாலை ஊழியர்கள் பின்னால் வரும் வாகன ஓட்டிகள் தெரிந்து கொள்ளும் வகையில் தடுப்புகளை வைத்தனர்.
ஆற்காடு அடுத்த மேல்விஷாரத்தில் வசித்து வருபவர் 18 வயது முகமது தலாக். அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியில் வசித்து வருபவர் 16 வயது பயாஸ் 11ம் வகுப்பு படித்து வந்தார். நண்பர்களான இருவரும் நேற்று காலை 7.30 மணிக்கு ஒரே பைக்கில் வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். பைக்கை முகமதுதலாக் ஓட்டி சென்றார்.
வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது பழுதாகி நின்றுகொண்டிருந்த லாரி மீது பைக் எதிர்பாராமல் மோதியது. இதனால் தலையில் பலத்த காயமடைந்த முகமதுதலாக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பயாஸ் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து பொதுமக்கள் வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்த பயாஸை மீட்டு வேலூர் பென்ட்லெண்ட் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து முகமதுதலாக், பயாஸ் இருவரது சடலமும் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இந்த விபத்து குறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் 2 மாணவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.எஸ்பி இது குறித்து தேசிய நெடுஞ்சாலை மற்றும் மேம்பாலங்களில் கனரக வாகனங்கள் பழுதாகி நின்றால் பின்னால் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்காமல் இருக்க தடுப்புவேலி அமைப்பது குறித்து நெடுஞ்சாலைத்துறை ஊழியர்களுக்கு சரியான பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளதா? என கேட்டறிந்தார்.
பழுது அல்லது விபத்தில் சிக்கும் வாகனங்களின் பின்புறம் பார்வைக்கு தெரியும் வகையில் அகலமான பிளாஸ்டிக் தடுப்பு வைத்திருக்கலாம். எனவே இனிவரும் காலங்களில் விபத்து அல்லது வாகனங்கள் பழுதாகி நின்றுவிட்டால் அதன்பின்னால் உடனடியாக அகலமான தடுப்புகள் வைக்கப்பட வேண்டும். மேலும் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து தடுப்பது குறித்து போக்குவரத்து போலீசார், ரோந்து போக்குவரத்து போலீசார், தேசிய நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள், தனியார் மற்றும் அரசு பேருந்து டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுடன் விரைவில் ஆய்வுக்கூட்டம் நடத்தி சாலை பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!