வெள்ளத்தில் மிதக்கும் கேரளா! மீட்பு பணியில் தேசிய பேரிடர், ராணுவம், விமானப்படை.. !

 
வெள்ளத்தில் மிதக்கும் கேரளா! மீட்பு பணியில் தேசிய பேரிடர், ராணுவம், விமானப்படை.. !

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாமல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.

கேரளா முழுவதுமே தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனையடுத்து கோழிக்கோடு, பாலக்காடு, மலப்புரம், வயநாடு பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கோட்டயம் புறநகர் பகுதியான பூஞ்சாரில் அரசு போக்குவரத்துக் கழக பேருந்து வெள்ளத்தில் சிக்கிக்கொண்டது. பாதி அளவுக்கு தண்ணீரில் மூழ்கிய நிலையில், பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதனால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

தொடர்ந்து மலையோர கிராமங்களில் பலத்த மழை பெய்து வருவதால் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்படக் கூடும் எனவும், அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அணைகளில் உபரிநீர் உடனுக்குடன் வெளியேற்றப்படவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர் மழையை தொடர்ந்து மீட்பு பணியில் உதவ பாதுகாப்பு படையின் உதவியை மாநில அரசு கோரியதையடுத்து, மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையுடன் ராணுவம் மற்றும் விமானப்படையும் களம் இறங்கியுள்ளது. கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் உள்ள மலைக்கிராம பகுதிகளுக்கு பாதுகாப்பு படை மீட்பு பணிகளுக்காக விரைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கேரளாவில் பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் அம்மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web