2000 கிலோ கடல் வெள்ளரியை மண்டபம் அருகே கைப்பற்றியது இந்திய கடலோர பாதுகாப்பு படை

 
2000 கிலோ கடல் வெள்ளரியை மண்டபம் அருகே கைப்பற்றியது இந்திய கடலோர பாதுகாப்பு படை

தடை செய்யப்பட்ட கடல் வெள்ளரியை, 2000 கிலோ அளவுக்கு இந்திய கடலோர காவல் படை, மண்டபம் அருகே செப்டம்பர் 19 ஆம் தேதி கைப்பற்றியது.

கடல் வெள்ளரி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, இந்திய கடலோர காவல் படையினர் செப்டம்பர் 19 ஆம் தேதி அதிகாலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, சந்தேகத்திற்குரிய படகு ஒன்று செப்டம்பர் 19 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு இடைமறிக்கப்பட்டது. அந்த படகில் இருந்த 200 சாக்கு மூட்டைகளில் 2000 கிலோ கடல் வெள்ளரிகள் கைப்பற்றப்பட்டன.

மண்டபம் தெற்கு வெடலை பகுதியிலிருந்து 15 கி.மீ தொலைவில், ஆட்கள் இல்லாமல் அந்த படகு நங்கூரமிடப்பட்டிருந்தது. கைப்பற்றப்பட்ட கடல் வெள்ளரிகள் மண்டபம் கொண்டு வரப்பட்டு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. இதன் மதிப்பு சுமார் ரூ.8 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

சீனா மற்றும் தெற்கு ஆசிய நாடுகளில் கடல் வெள்ளரிகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது. இந்தியாவில் அரியவகை வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடல் வெள்ளரிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

From around the web