எனக்கு எண்ட் கார்டே கிடையாது! நடிகர் வடிவேலு அலப்பறை!
தமிழ் திரையுலகில் வைகைப்புயலாக மதுரை மண்ணில் இருந்து வந்து தனது தனிப்பட்ட காமெடித்திறமையால் தமிழ் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்தவர் நடிகர் வடிவேலு.
இவர் சில ஆண்டுகளாக தயாரிப்பு தரப்பில் உருவான பிரச்சனை காரணமாக நடிப்பில் இருந்து விலகி இருந்தார். தற்போது நிலைமை சரியாகி புதிய படங்கள் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து நடிகர் வடிவேலு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் “என்னுடைய பிரச்சனை சாதரணப் பிரச்சினை. என்னை வைகைப்புயலுன்னு சொல்லுவாங்க, ஆனால் என் வாழ்க்கையிலே சூறாவளியே வந்துடுச்சு. என மனசு சரியில்லை.. ராத்திரி தூக்கமில்லை.. உடம்பு சரியில்லை.. ஒரு டாக்டருக்கு போன எடத்துலே மனசை ரிலாக்ஸ் செய்ய பக்கத்துல நடக்கற சர்க்கசில் ஒரு பபூன் பண்ற சேட்டையை பாரு.. ரிலாக்ஸ் கிடைக்குமுன்னு சொன்னாரு.. அந்த பபூனே நான் தான்னு டாக்டர்கிட்டே மட்டுமில்லாம உங்ககிட்டேயும் சொல்றேன். அந்த சர்க்கஸ் பஃபூன் போலத்தான் இத்தனை நாட்களாக வாழ்ந்து வந்தேன்.
இந்த கொரோனாவால் உலகமே ஆடிப்போயிருக்கு. இந்த நேரத்தில் என்னுடைய காமெடியால் மக்கள் வாய் விட்டு சிரிச்சதை சொன்ன போது மனதுக்கு சந்தோஷமாக இருந்தது. மக்களை எப்போதும் சிரிக்க வைக்க வேண்டும் என்பதே என் ஆசை.
அதன் பிறகே இந்த உயிர் என்னைவிட்டு போகும். இனி எல்லாமே நல்லதாக நடக்கும். எனக்கு எண்டே கிடையாது. என்னைப் பற்றி சொல்லும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய். வரலாற்று படங்களில் நடிக்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை. சந்திரபாபு, சுருளிராஜன், நாகேஷ் போன்ற நகைச்சுவை நடிகர்களின் ரசிகன் நான்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் நான் மகிழ்ச்சியில் இருக்கிறேன். உதயநிதி உடன் இணைந்து புதிய படம் நடிக்க தயாராக உள்ளேன். புதிதாக நடிக்க உள்ள படத்தில் பாடல் ஒன்றையும் பாடப்போகிறேன்.திரையுலகிற்கும் தனக்கும் விவேக் மறைவு பேரிழப்பு” எனத் தெரிவித்துள்ளார்.