undefined

வாக்குறுதி கொடுத்து அரசு ஊழியர்களை ஏமாற்றுவது திமுகவின் வழக்கம்... பாமக ராமதாஸ் ஆவேசம்!

 

ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு வகையாக வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களையும், அரசு ஊழியர்களையும் ஏமாற்றுவது தான் திமுகவின் வழக்கம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட நிதிசார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கைவிரித்து விட்டதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. 

அரசு ஊழியர்களின் துணையுடன் ஆட்சிக்கு வந்த மு.க.ஸ்டாலின் இப்போது அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கூட நடைமுறைப்படுத்த மறுப்பதன் மூலம் உண்மை முகத்தைக் காட்டியுள்ளார்.

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறை தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் ஆசிரியர்களின் நிதி சாராத கோரிக்கைகளை மட்டும் ஆய்வு செய்ய ஆணையிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட நிதி சார்ந்த எந்த கோரிக்கைகளையும் நிறைவேற்ற முடியாது என்று கூறிவிட்டதாக தெரிகிறது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளும் இதை உறுதி செய்துள்ளனர். தங்களின் வாழ்நாள் முழுவதும் திமுகவை ஆதரித்து வந்த அரசு ஊழியர்களுக்கு இதை விடக் கொடுமையான துரோகத்தை எவராலும் செய்ய முடியாது.

தமிழ்நாடு அரசு நினைத்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று நாளையே அறிவிப்பு வெளியிட முடியும். தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது மிகவும் எளிதானது. ஆனால், அதை செய்ய மு.க.ஸ்டாலினுக்கு மனம் வரவில்லை. தமிழ்நாடு அரசுப் பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது முழுக்க முழுக்க மாநில அரசின் உரிமை. இதில் மத்திய அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை.

2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது வினோதமான வாக்குறுதி ஒன்றை மு.க.ஸ்டாலின் அளித்தார். அதாவது மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். இப்படியாக ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு வகையாக வாக்குறுதி கொடுத்து மக்களையும், அரசு ஊழியர்களையும் ஏமாற்றுவது தான் திமுகவின் வழக்கமாகும். அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

சிலரை சில முறை ஏமாற்றலாம், பலரை பலமுறை ஏமாற்றலாம். ஆனால், அனைவரையும் அனைத்து முறையும் ஏமாற்ற முடியாது. திமுகவிடம் தொடர்ந்து ஏமாறுவதற்கு ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் ஏமாளிகள் அல்ல. திமுக அரசின் தொழிலாளர் விரோத செயல்பாடுகளுக்கு பழிதீர்க்கும் வகையில் 2026 தேர்தலில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் சரியான பாடம் புகட்டுவார்கள். 2026-ம் ஆண்டில் அமையவிருக்கும் பா.ம.க. அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சியில் பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்” என்று தெரிவித்துள்ளார். 

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!