undefined

‘நாட்டின் மிக சக்தி வாய்ந்த பெண் நான்’: கங்கனா ரணாவத்

 

சுப்ரீம் கோர்ட்டில் கங்கனா ரணாவத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதை கிண்டலடிக்கும் வகையில் ‘நாட்டின் மிக சக்தி வாய்ந்த பெண் நான்’ என கங்கனா ரணாவத் வெளியிட்ட பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளுள் ஒருவரான கங்கனா ரணாவத், பல சர்ச்சையான கருத்துகளை பேசி வந்தார். சமீபத்தில் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடும் விவசாயிகளை காலிஸ்தான் தீவிரவாதிகள் என்றும் விமர்சித்தார். இதனையடுத்து சீக்கிய அமைப்பினர் கங்கனா ரணாவத் மீது புகார் கொடுத்தனர். ட்விட்டர் விதிகளை மீண்டும் மீண்டும் மீறிய காரணத்தால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கங்கனா ரணாவத்தின் ட்விட்டர் கணக்கும் நிரந்தரமாக முடக்கப்பட்டது. இதற்கெல்லாம் பயப்படாத அவர் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கருத்துகளை பதிவிட்டு வருகிறார்.

இதனையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் கங்கனா ரணாவத்துக்கு எதிராக மனு தாக்கல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், ‘நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்காமல் இருக்க கங்கனாவின் சமூக வலைதள பதிவுகளை தணிக்கை செய்து வெளியிட வேண்டும். விவசாயிகளையும் அவர்களது போராட்டத்தையும் பற்றி சர்ச்சையான கருத்துகளை பேசியது தொடர்பில் கங்கனா மீது அளிக்கப்பட்டுள்ள புகாரில் ஆறு மாதங்களுக்குள் முறையாக குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

ஏற்கனவே பேசிய சர்ச்சையான கருத்துகளுக்காக சுப்ரீம் கோர்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதையே கிண்டலடிக்கும் வகையில், ‘ஹா..ஹா..ஹா..நாட்டின் மிகவும் சக்தி வாய்ந்த பெண் நான் தான்’ என இண்ஸ்டாகிராமில் கங்கனா ரணாவத் பதிவிட்டுள்ளார்.