undefined

 இளம்பெண் எரித்துக் கொலை... கள்ளக்காதலால் விபரீதம்!

 
 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பட்டணம் பெரிய ஏரி உள்ளது. அந்த ஏரி தற்போது சீமைக்கருவேல மரங்கள் மற்றும் முட்புதர்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் ஏரி உள்ள பகுதியில் ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும். இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த ஏரியில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரின் பிணம் எரிந்த நிலையில் கிடந்தது. இதை அந்த வழியாக ஆடு மேய்க்க சென்ற ஒருவர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதைத்தொடர்ந்து ராசிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தகவலின் பேரில் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது இறந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை. ஆனால் உடலில் காயங்களுடன் எரிந்த நிலையில் கிடந்ததால், அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். மேலும் பெண்ணின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
 
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், இறந்து கிடந்த பெண், ராசிபுரம் காக்காவேரி பகுதியை சேர்ந்த பரமேஷ் - தனக்கொடி தம்பதியின் மகள் மணிமேகலை (29) என்பதும், சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பொன்னாரம்பட்டி பறவைகாட்டை சேர்ந்த கூலி தொழிலாளி ரமேஷ் என்பவரின் 2-வது மனைவி என்பதும் தெரியவந்தது. மேலும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், முதல் கணவரை பிரிந்த மணிமேகலை, கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு ரமேஷை 2-வது திருமணம் செய்துள்ளார். பின்னர் அவர் தனது குழந்தைகள் நிஷா (8), பவ்யாவுடன் (5) பட்டணம் அடுத்த வடுகம்முனியப்பம்பாளையம் ஊராட்சி, குச்சிக்காட்டில் வசித்து வந்துள்ளார். அதனால் பொன்னாரம்பட்டியில் முதல் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வரும் ரமேஷ், அவ்வப்போது குச்சிக்காட்டிற்கு வந்து மணிமேகலையை பார்த்து சென்றுள்ளார்.
 

ஆனால் குச்சிக்காட்டை சேர்ந்த மற்றொரு வாலிபருடன், மணிமேகலைக்கு கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் அடிக்கடி செல்போனில் பேசியதை அறிந்த ரமேஷ் அவர்களை கண்டித்தார். இதுகுறித்து ரமேஷின் புகாரின் பேரில், மணிமேகலையுடன் கள்ளத்தொடர்பில் இருந்த வாலிபரை நாமகிரிப்பேட்டை போலீசார் எச்சரித்து அனுப்பி உள்ளனர். கடந்த மாதம் 15-ம் தேதி குழந்தைகளை விட்டுவிட்டு மணிமேகலை மாயமானதாக தெரிகிறது. 

இந்த நிலையில் அவரது உடல் பட்டணம் பெரிய ஏரியில் எரித்துக்கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு உள்ளது. அவரது உடல் எரிக்கப்பட்டு உள்ளதால், பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மணிமேகலையுடன் தொடர்பில் இருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்த உள்ளோம். விசாரணை முழுமையாக முடிவடைந்த பின்னரே கொலைக்கான முழு விவரம் தெரியவரும் என்று கூறினர்.