undefined

 பெண்கள் வீட்டுக்கு வாழ போகும் ஆண்மகன்கள்..  கால காலமாக பாரம்பரியத்தை பின்பற்றும் சமூகம்..!!

 
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 16 ஊர்களில் பெண் வீட்டுக்கு மாப்பிள்ளை வாழச் செல்லும் வித்தியாசமான பழக்கவழக்கம் இன்னும் நடைமுறையில் இருந்து வருகிறது. பெண்களுக்கு அதிக உரிமைகளை கொடுக்கும் வகையில் நன்குடி வேளாளர் சமூகத்தில் தான் இந்த வழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிவகளை, தட்டப்பாறை, ஏரல், பாண்டியாபுரம், சொக்கலிங்கபுரம், ராமச்சந்திராபுரம், கூட்டுடன்காடு, செக்காரக்குடி, புதூர், உள்ளிட்ட 16 ஊர்களில் நன்குடி வேளாளர் சமூக மக்கள் அடர்த்தியாக வாழ்கிறார்கள். இவர்களின் சடங்குகளும், சம்பிரதாயங்களுக்கும் சற்று வித்தியாசமானவை என்றாலும் எல்லாமே பெண்ணுரிமையை மையப்படுத்தியதாக தான் இருக்கும். நன்குடி வேளாளர் சமூகத்தில் பெண் குழந்தையை பெற்றவர்கள் தங்கள் வாழ்நாளின் இறுதிவரை மகளுடன் தான் வசிப்பார்கள். மகன்களை மருமகள் வீட்டுக்கு வாழ அனுப்பி வைத்துவிடுவார்கள்.

சொத்துரிமை, பெண்ணுரிமை பற்றி இன்று பெரியளவில் பேசப்படும் நிலையில், பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே அதனை நடைமுறைப்படுத்திய பெருமை நன்குடி வேளாளர் சமூகத்தாரை சேரும். மாப்பிள்ளை வீட்டார் பெண் கேட்டுச் செல்வதை அறிந்திருப்போம். ஆனால் பெண் வீட்டார் மாப்பிள்ளை கேட்டுச் செல்வதை அறிந்திருப்பீர்களா, அதுவும் நன்குடி வேளாளர் சமூகத்தில் இருக்கும் ஒரு பழக்கவழக்கமாகும்.

வீட்டோட மாப்பிள்ளை என்பதை இன்று கேலி கிண்டலாக பார்க்கும் காலத்தில், அதனை காலம் காலமாக உள்ள பாரம்பரிய பழக்க வழக்கமாக கருதுகின்றனர் நன்குடி வேளாளர் சமூக மக்கள். அதுமட்டுமல்ல பெண் வீட்டுக்கு வரும் மருமகன்கள் தங்கள் மாமனார், மாமியாரை பெற்றோர்கள் போல் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதும் சொத்து வரி உட்பட எதுவாகினும் அது பெண்கள் பெயரிலேயே கட்ட வேண்டும் என்பதும் ஆண்டாண்டு காலமாக உள்ள நடைமுறையாகும். மொத்தத்தில் பெண் என்பவள் கணவர் வீட்டு அடுப்பங்கரைஅடிமை கிடையாது என்பதை மையமாக வைத்து நன்குடி வேளாளர் சமூகத்தில் இந்த பாரம்பரிய பழக்க வழக்கங்கள் வகுக்கப்பட்டுள்ளன.