இலங்கையின் புதிய அதிபர் யார்? வாக்கு எண்ணிக்கையில் விறுவிறுப்பு.. இன்று பிற்பகலில் முடிவுகள்!
நேற்று இலங்கையில் புதிய அதிபருக்கான தேர்தல் நடைபெற்ற நிலையில், 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன. இன்று வாக்கு எண்ணிக்கை துவங்கிய நிலையில், இன்று பிற்பகலில் புதிய அதிபர் யார் என்பது தெரிய வரும்.
கடந்த 2019 நவம்பரில் இலங்கையில் நடைபெற்ற 8வது அதிபர் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் போட்டியிட்ட மகிந்த ராஜபக்சவின் தம்பி கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றார். அதன் பின்னர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்சவே காரணம் என மக்கள் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து 2022 மே 9-ம் தேதி பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்தார். 2022 ஜூலை 9-ம் தேதி அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் சிறைபிடித்ததால் அதிபர் கோத்தபய ராஜபக்ச வெளிநாட்டுக்கு தப்பியோடினார். பின்னர் அவர் பதவியை ராஜினாமா செய்தார். புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கவும் பிரதமராக தினேஷ் குணவர்த்தனவும் பதவியேற்றனர்.
இந்நிலையில், இலங்கையின் 9-வது அதிபர் தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. வாக்குரிமை பெற்ற 1.7 கோடி பேர் வாக்களிப்பதற்காக 13,421 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இலங்கை வரலாற்றில் முதல்முறையாக இந்த தேர்தலுக்கு அதிக செலவு செய்யப்பட்டுஇருக்கிறது. இலங்கை ரூபாய் மதிப்பில் 1,000 கோடி (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.276 கோடி) செலவிடப்பட்டு உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது.
அதிபர் தேர்தல் களத்தில் மொத்தம் 38 வேட்பாளர்கள் உள்ளனர். அவர்களில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரம சிங்க, ஐக்கிய சக்தி முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசாநாயக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வேட்பாளர் நமல் ராஜபக்ச ஆகிய 4 பேர் இடையே கடுமையான போட்டி நிலவியது. மட்டக்களப்பு முன்னாள் எம்.பி. அரியநேந்திரன், தமிழ் பொது கூட்டமைப்பு என்ற பெயரில், சிலதமிழ் அமைப்புகளின் சார்பில் தமிழர்களுக்கான பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் நேற்றிரவு 7 மணிக்கு தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. இதன்பிறகு வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இலங்கையில் தேர்தல், விருப்ப வாக்கு அடிப்படையில் நடைபெற்றது. இதன்படி வாக்காளர்கள், வேட்பாளர் பட்டியலில் இருந்து 3 பேரை தேர்வு செய்யலாம். அதாவது, ஒரு வாக்காளர் தனது விருப்பத்தின் அடிப்படையில் 1, 2, 3 என மூன்று வேட்பாளர்களுக்கு வாக்கு அளிக்கலாம். இதில் வாக்காளர் குறிப்பிடும் முதல் வேட்பாளர் முன்னுரிமையை பெற்றவர் ஆகிறார்.
வாக்கு எண்ணிக்கையின்போது, ஒன்றாம் எண் வாக்குகளை 50 சதவீதத்துக்கு மேல் பெற்ற வேட்பாளர் புதிய அதிபராக அறிவிக்கப்படுவார். எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகளை பெறவில்லை என்றால் முதல் இரண்டு இடங்களை பிடித்த வேட்பாளர்களின் விருப்ப வாக்குகள் எண்ணப்படும். அதில் அதிக வாக்குகளை பெறுபவர் புதிய அதிபராக அறிவிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!