undefined

விஸ்வகர்மா திட்டத்தை செயல்படுத்த மாட்டோம்... மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

 

தமிழக அரசு, பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை செயல்படுத்தாது என்றும் தமிழ்நாட்டிற்கென விரிவான திட்டத்தினை உருவாக்க முடிவு செய்துள்ளதாகவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  இது குறித்து மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும், பிரதமரின் விஸ்வகர்மா திட்டம், சாதி அடிப்படையிலான தொழில் முறையை வலுப்படுத்தும் என்பதால், தற்போதைய வடிவில் அதனை செயல்படுத்திட இயலாது என்றும், சமூக நீதி அடிப்படையில், தமிழ்நாட்டிலுள்ள கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் விரிவான திட்டம் ஒன்றினை உருவாக்கிட தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதாகவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் , மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சிக்கு இன்று (27-11-2024) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரி விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசின் சார்பில் 4-1-2024 நாளன்று பிரதமருக்கு தான் எழுதியிருந்த கடிதத்தினை முதல்வர் நினைவுகூர்ந்துள்ளார்.

மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம், சாதி அடிப்படையிலான தொழில் முறையை வலுப்படுத்தும் என்பதைக் கருத்தில் கொண்டு, இந்தத் திட்டத்தை ஆய்வு செய்திட தமிழ்நாடு அரசின் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டதாகவும், இக்குழு விரிவான ஆய்வினை மேற்கொண்டு, இத்திட்டத்தில் கீழ்க்காணும் மாற்றங்களைச் செய்திடப் பரிந்துரைத்துள்ளதாகவும், அவற்றை பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

1. விண்ணப்பதாரரின் குடும்பம், பாரம்பரியமாக குடும்ப அடிப்படையிலான வர்த்தகத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத் தேவை நீக்கப்பட வேண்டும். அதற்கு பதிலாக, வழிகாட்டுதல்களில் பட்டியலிடப்பட்டுள்ள எந்தவொரு தொழிலையும் மேற்கொள்ள விரும்பும் எந்தவொரு நபரும் இந்தத் திட்டத்தின்கீழ் உதவி பெற தகுதியுடையவராக இருக்க வேண்டும்.

2. இத்திட்டத்தில் பயன்பெறுவோரின் குறைந்தபட்ச வயது வரம்பினை 35-ஆக உயர்த்தலாம். இதனால் தங்கள் குடும்ப வர்த்தகத்தைத் தொடர, அதனை நன்கறிந்தவர்கள் மட்டுமே இந்தத் திட்டத்தின்கீழ் பலன்களைப் பெற முடியும்.

3. கிராமப்புறங்களில் பயனாளிகளை சரிபார்க்கும் பொறுப்பு கிராம பஞ்சாயத்துத் தலைவருக்கு பதிலாக, வருவாய்த் துறையைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

இந்நிலையில், மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்திலிருந்து 15-3-2024 அன்று வரப்பெற்ற பதிலில், மேற்படி பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை.

எனவே, பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தற்போதைய வடிவில் செயல்படுத்துவதை தமிழ்நாடு அரசு முன்னெடுத்துச் செல்லாது என்றும்,

இருப்பினும், சமூக நீதி என்ற ஒட்டுமொத்த கொள்கையின்கீழ் தமிழ்நாட்டில் உள்ள கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டாத கைவினைஞர்களை உள்ளடக்கி, விரிவான திட்டம் ஒன்றினை உருவாக்கிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு செயல்படுத்தவிருக்கும் இந்தத் திட்டம், சாதி மற்றும் குடும்பத் தொழில் வேறுபாடின்றி, மாநிலத்தில் உள்ள அனைத்து கைவினைஞர்களுக்கும் முழுமையான ஆதரவை அளிக்கும் என்றும், இத்தகைய திட்டம் அவர்களுக்கு நிதி உதவி, பயிற்சி மற்றும் அவர்களின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்தையும் விரிவாக உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

பிரதமா் நரேந்திர மோடி 2023-ஆம் ஆண்டு செப்டம்பா் 17-ஆம் தேதி ‘பிரதமா் விஸ்வகா்மா யோஜனா’ திட்டத்தை அறிமுகப்படுத்தினாா். 2023-24 நிதியாண்டு முதல் 2027-28 நிதியாண்டு வரை ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.13,000 கோடி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் நாடு முழுவதும் உள்ள கைவினைத் தொழிலாளா்களுக்காக கொண்டுவரப்பட்டது.

கைவினைஞா்களுக்கு தங்களின் கைவினைத் திறனை மேம்படுத்திக்கொள்ள பயிற்சி கொடுப்பது, அதற்குரிய கருவிகளைக் கையாளுவது குறித்த பயிற்சி கொடுப்பது, கைவினைஞா்களுக்குத் தேவையான தொழில் கருவிகளை வழங்குவது, பயிற்சிக்கு பின் விஸ்வகா்மா சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்குவதன் மூலம் அங்கீகரித்தல், 5 முதல் 7 நாள்கள் வரை அடிப்படை பயிற்சி மற்றும் 15 நாள்கள் அல்லது அதற்கு அதிகமான நாள்கள் தொழில் பயிற்சி கொடுத்து பயிற்சிக் காலத்தில் நாள் ஒன்றுக்கு உதவித் தொகையாக ரூ. 500 வழங்குதல் உள்ளிட்டவை இதில் அடங்கும்.

தச்சர், கொல்லர், பொற்கொல்லர், குயவர், சிற்பிகள், கல் தச்சர்கள், காலணி தைப்பவர், கொத்தனார், கூடை- பாய்- துடைப்பம் தயாரிப்பவர், கயிறு செய்பவர், பாரம்பரியமாக பொம்மைகள் செய்பவர், முடிதிருத்தும் தொழிலாளர், பூமாலைகள் கட்டுபவர், சலவைத் தொழிலாளர், தையல்காரர், மீன்பிடி வலை தயாரிப்பவர், படகு தயாரிப்பவர், கவசம் தயாரிப்பவர், சுத்தியல் மற்றும் கருவிகள் செய்பவர்கள், பூட்டுகள் செய்பவர் இந்த திட்டத்தில் இணையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் குலத் தொழிலை மேலோங்கச் செய்கிறது, சாதி ரீதியிலானது, கைவினைஞர்களிடையே பாகுபாடு காட்டுகிறது என்று கூறி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!