undefined

தொடர் முகூர்த்தம், விநாயகர் சதுர்த்தி... பூக்களின் விலை கடும் உயர்வு!

 
விநாயகர்

தொடர் முகூர்த்தம் மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் பூக்களின் விலை கிடுகிடுவென கடுமையாக உயர்ந்துள்ளது. 

திண்டுக்கல் மலர் சந்தையில் மல்லிகை விலை வழக்கமான விலையை விட கிலோவுக்கு ரூ.1000 வரை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வரப்படுகிறது. திண்டுக்கல்லில் மாநகராட்சிக்கு சொந்தமான மலர் சந்தையில், திண்டுக்கல் மாவட்டத்தை சுற்றியுள்ள அய்யலூர், வட மதுரை, சின்னாளப்பட்டி, நிலக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளையும் பூக்களை கொண்டு வருவது வழக்கம். 

ஆடி மாதத்தில் திருமணம் நடைபெறாது என்பதாலும், சுப நிகழ்ச்சிகளுக்கான முகூர்த்த நாட்கள் இல்லாததாலும் கடந்த வாரம் வரை பூக்களின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்து காணப்பட்ட நிலையில், தற்போது தொடர் முகூர்த்தம் மற்றும் விநாயகர் சதுர்த்தி என அடுத்தடுத்து பண்டிகைகள் துவங்கி உள்ளதால் திண்டுக்கல் மலர் சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 

கடந்த வாரம் ரூ.200க்கு விற்பனையாகி வந்த மல்லிகை பூ இன்று ரூ.1,200க்கும், ரூ.130க்கு விற்பனையான முல்லை பூ விலை ரூ.600க்கும், ரூ.300க்கு விற்பனையான ஜாதிமல்லி பூ விலை ரூ.500க்கும், ரூ.800க்கு விற்பனையான கனகாம்பரம் ரூ.1,200க்கும் விற்பனையாகிறது.

அதே சமயம் பண்டிகை நாட்களையும், தொடர் முகூர்த்த நாட்களையும் முன்னிட்டு இன்று மட்டுமே திண்டுக்கல் மலர் சந்தையில் 50 முதல் 70 டன் வரை பூக்கள் விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பூக்களின் விலை பெரிதளவில் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ள அதே சமயம் கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் திடீரென பல மடங்கு பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.